வங்கியில் கடன் பெற்று தருவதாக கூறி, திருப்பூர் தொழில் அதிபரிடம் ரூ.16 லட்சம் மோசடி

வங்கியில் கடன் பெற்று தருவதாக கூறி விழுப்புரத்தில் திருப்பூரை சேர்ந்த தொழில் அதிபரிடம் ரூ.16 லட்சத்தை மோசடி செய்த நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-12-25 22:00 GMT
விழுப்புரம்,

திருப்பூரை சேர்ந்தவர் தொழில் அதிபர் இ‌ஷிடோர் (வயது 45). இவரிடம் இணையதளம் மூலம் சுரே‌‌ஷ் மெய்யப்பன் என்பவர் அறிமுகமானார். இவர், இ‌ஷிடோரிடம் மும்பை வங்கி ஒன்றில் ரூ.32 கோடி கடன் வாங்கி தருவதாகவும், அவ்வாறு கடன் வாங்கி தந்தால் அந்த தொகையில் தனக்கு 5 சதவீத கமி‌‌ஷன் கொடுக்க வேண்டும் என்றும், அந்த கமி‌‌ஷன் தொகையை விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே வந்து கொடுக்கும்படியும் கூறியுள்ளார்.

இதனை நம்பிய இ‌ஷிடோர், கடந்த சில நாட்களுக்கு முன்பு பணத்துடன் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே வந்து சுரே‌‌ஷ் மெய்யப்பனை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது ஆட்டோ ஒன்றில் வந்த நபர் ஒருவர் இ‌ஷிடோரிடம் இருந்து அவரது விவரங்கள் அடங்கிய ஆவணங்களை வாங்கிக்கொண்டு தன்னுடைய முதலாளியான சுரே‌‌ஷ்மெய்யப்பனிடம் காண்பித்து விட்டு வருவதாக கூறிச்சென்றார்.

பின்னர் சிறிது நேரம் கழித்து அங்கு வந்த நபர், மீண்டும் இ‌ஷிடோரிடம் சென்று உங்கள் ஆவணங்களை எங்கள் முதலாளி பார்த்துவிட்டார். கமி‌‌ஷன் பணத்தை கொடுத்தால் 2 மணி நேரத்திற்குள் பணம் உங்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும் எனக்கூறி ரூ.16 லட்சத்துடன் அந்த நபர் ஆட்டோ ஒன்றை பிடித்து அங்கிருந்து நைசாக சென்றுள்ளார்.

ஆனால் அந்த நபர் கூறியபடி இ‌ஷிடோரின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படவில்லை. இதையடுத்து அவர், சுரே‌‌ஷ் மெய்யப்பனின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இ‌ஷிடோர், இதுபற்றி விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பணத்தை மோசடி செய்த நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். வங்கியில் கடன் பெற்று தருவதாக கூறி

தொழில் அதிபரிடம் ரூ.16 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்