ஈரோட்டில் 25 ஆண்டுகளுக்கு தண்ணீர் பஞ்சம் ஏற்படாது - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

ஊராட்சிக்கோட்டை கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் ஈரோடு மாநகரில் 25 ஆண்டுகளுக்கு தண்ணீர் பஞ்சம் ஏற்படாது என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

Update: 2019-12-25 23:30 GMT
ஈரோடு,

ஈரோடு ஒன்றியத்துக்கு உள்பட்ட மேட்டுநாசுவம்பாளையம் பகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

அத்திக்கடவு அவினாசி திட்டம் தொடங்கப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் ஏழை, எளிய மக்களின் மேம்பாட்டுக்காக தொழில் முதலீட்டாளர்கள் மூலம் ரூ.3 லட்சத்து 431 கோடி முதலீடுகளை ஈட்டி அவற்றின் மூலம் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஏற்படும் விபத்துகளை தடுக்கவும், போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கவும் இருவழி மற்றும் நான்கு வழி சாலைகள் மற்றும் மேம்பாலங்களை உருவாக்க திட்டம் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது.

ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட மக்களுக்கு இன்னும் 25 ஆண்டுகளுக்கு குடிநீர் பஞ்சமே வராத அளவுக்கு ரூ.600 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்ட ஊராட்சிக்கோட்டை கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் ஈரோடு முதல் கோபிசெட்டிபாளையம் வரை ரூ.250 கோடி முதலீட்டில் நான்கு வழிச்சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள காவிலிபாளையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், ‘400 ஏக்கர் பரப்பளவு கொண்ட காவிலிபாளையம் ஏரி அரசு சார்பில் தூர்வாரப்பட்டு கோடை காலங்களில் தண்ணீர் தேக்கவும், சுற்றுலா தலமாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும். கோபிசெட்டிபாளையத்தை தலைமை இடமாக கொண்டு தனி மாவட்டம் பிரிப்பது குறித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் முடிவு எடுப்பார். நீட் தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு ஆடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது மத்திய மந்திரிக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது. மற்ற மாநிலங்களில் எவ்வாறு கடைபிடிக்கப்படுகிறதோ, அதை தமிழகத்திலும் பின்பற்ற வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. நகராட்சி, மாநகராட்சி தேர்தல் நடத்துவது குறித்து மாநில தேர்தல் ஆணையம்தான் முடிவு எடுக்கும்,’ என்றார்.

மேலும் செய்திகள்