மயிலாடுதுறை அருகே பரபரப்பு: அ.தி.மு.க. கூட்டணி தேர்தல் அலுவலகத்தில் கண்ணாடி உடைப்பு

மயிலாடுதுறை அருகே அ.தி.மு.க. கூட்டணி கட்சியின் தேர்தல் அலுவலகத்தில் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்ததுடன் அங்கு இருந்த பேனரையும் கிழித்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-12-26 23:00 GMT
குத்தாலம்,

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள பெரம்பூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சேதுராஜா(வயது 54). இவர், அதே பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். பா.ஜனதாவை சேர்ந்த இவர், நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பெரம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். தேர்தல் பணியாற்ற வசதியாக சேதுராஜா தனது ஓட்டலை தற்காலிகமாக அ.தி.மு.க. கூட்டணி கட்சி அலுவலகமாக மாற்றி உள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கூட்டணி கட்சியினருடன் வாக்குகளை சேகரித்த சேதுராஜா, கட்சியினருடன் இரவு 11 மணி வரை தேர்தல் பணி அலுவலகத்தில் இருந்து விட்ட, பின்னர் வீட்டிற்கு சென்றார். நேற்று அதிகாலை சேதுராஜா, தேர்தல் பணி அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அலுவலகத்தில் இருந்த கண்ணாடி உடைக்கப்பட்டு, பேனர் கிழிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

புகார்

இதுகுறித்து தகவல் அறிந்த கூட்டணி கட்சியினர் தேர்தல் பணி அலுவலகம் முன்பு குவிந்தனர். பின்னர் குத்தாலம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க.செயலாளர் தமிழரசன் தலைமையில் பா.ஜனதா கட்சியின் மயிலாடுதுறை நகர தலைவர் மோடிகண்ணன் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் பெரம்பூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேர்தல் பணி அலுவலகத்தில் கண்ணாடியை உடைத்து, பேனரை கிழித்த மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்