பெத்தனாட்சிவயல் கிராமத்தில் 2 மாதங்களில் அடிப்படை வசதிகள் கலெக்டர் கோவிந்தராவ் உறுதி

பெத்தனாட்சிவயல் கிராமத்தில் 2 மாதங்களில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் உறுதி அளித்துள்ளார்.

Update: 2019-12-28 22:45 GMT
சேதுபாவாசத்திரம்,

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே ஊமத்தநாடு ஊராட்சியில் பெத்தனாட்சிவயல் கிராமம் உள்ளது. இங்கு 150 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 250 வாக்காளர்கள் உள்ளனர். இந்த கிராமத்தில் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.

இங்கு வாழ்க்கை நடத்தும் மக்கள் வீடு கட்டியுள்ள இடத்துக்கு மனை பட்டா கிடையாது. இந்த நிலங்கள் அனைத்தும் மேய்ச்சல் தரிசு என கூறப்படுகிறது. 50 முதல் 100 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வரும் இவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க அரசு மறுத்து வருகிறது. பட்டா இல்லாததால் மின் இணைப்பு பெற முடியவில்லை. அரசு திட்டங்கள் மூலம் வீடு கட்டிக்கொள்ள முடியவில்லை என மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

கலெக்டர் ஆய்வு

கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருவது குறித்து நேற்று ‘‘தினத்தந்தி’’ நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் பெத்தனாட்சிவயல் கிராமத்தை நேற்று மாலை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கிராமத்துக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் 2 மாதங்களுக்குள் செய்து தரப்படும் என உறுதி அளித்தார்.

ஆய்வின்போது பேராவூரணி தாசில்தார் ஜெயலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் ரமே‌‌ஷ் ஆகியோர் உடன் இருந்தனர். உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உதவி புரிந்த ‘‘தினத்தந்தி’’ நாளிதழுக்கு பெத்தனாட்சிவயல் கிராம பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்