சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: நோணாங்குப்பம் படகு குழாமில் ரூ.85 லட்சம் வசூல்

நோணாங்குப்பம் படகு குழாமில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் கடந்த 9 நாட்களில் ரூ.85 லட்சம் வசூலானது.

Update: 2019-12-29 22:30 GMT
அரியாங்குப்பம்,

புதுச்சேரி சுற்றுலா நகரமாக விளங்கி வருகிறது. இங்கு நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாம் சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பிடித்த இடமாக திகழ்கிறது.

இங்கு பல்வேறு விதமான படகுகளில் சுற்றுலா பயணிகள் நோணாங்குப்பம் படகு குழாமில் இருந்து பாரடைஸ் பீச்சுக்கு படகு சவாரி சென்று ஆனந்த குளியல் போட்டு மகிழ்வார்கள். மேலும் அங்கு குதிரை சவாரி, இசையுடன் ஆனந்தகுளியல் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துள்ளது.

ரூ.85 லட்சம் வசூல்

பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ் பண்டிகை என தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுவைக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

இதில் பெரும்பாலானவர்கள் நோணாங்குப்பம் படகு குழாமிற்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் கூட்டம் கடந்த சில நாட்களாக அலைமோதியது.

கூட்டம் அதிகரிப்பால் சுமார் 4 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்து வருகின்றனர். கடந்த 9 நாட்களில் ரூ.85 லட்சம் வசூலானதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ரூ.1 கோடியை எட்டும்

இதற்கிடையே நாளை மறுநாள் (புதன்கிழமை) ஆங்கில புத்தாண்டு கொண்டாடப் படுகிறது. இதற்கான ஏற்பாடுகளும் படகு குழாமில் நடந்து வருகிறது.

இதன் மூலம் வருமானம் ரூ.1 கோடியை எட்டும் என தெரிகிறது.

மேலும் செய்திகள்