சென்னையில், புத்தாண்டு உற்சாக கொண்டாட்டம் மெரினாவில் ஏராளமானோர் திரண்டனர்

சென்னையில், புத்தாண்டு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மெரினாவில் ஏராளமானோர் திரண்டனர்.

Update: 2019-12-31 23:30 GMT
சென்னை,

2019-ம் ஆண்டு விடைபெற்று, நேற்று நள்ளிரவு 2020-ம் ஆண்டு பிறந்தது. இதையடுத்து புத்தாண்டை கொண்டாடுவதற்காக சென்னை மெரினா கடற்கரைக்கு இளைஞர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் இரவு 7 மணியில் இருந்தே குவிந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் உற்சாக மிகுதியில் ‘புத்தாண்டே வருக, வருக’ என வாழ்த்து கோஷம் எழுப்பினர். மேலும் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவியும், கைகுலுக்கியும் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே சென்னை மாநகர போலீஸ் சார்பில் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடப்பட்டது. கடற்கரைக்கு வந்திருந்தவர்களும் கேக் வெட்டியும், பலூன்களை பறக்க விட்டும் புத்தாண்டை வரவேற்றார்கள். புத்தாண்டையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளானோர் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினார்கள்.

இதுதவிர சென்னை மற்றும் புறநகரில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளிலும் ஆட்டம், பாட்டத்துடன் புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை பாண்டிபஜாரில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சீர்மிகு சாலை இரவை பகலாக்கும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இதேபோல நகர வீதிகளில் இளைஞர்களும் மோட்டார் சைக்கிளில் புத்தாண்டு பேரணி சென்றதையும் காணமுடிந்தது.

கடந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சென்னையில் உள்ள மேம்பாலங்களில் சிலர் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டனர். இந்த ஆண்டு அதை தடுப்பதற்காக 38 பெரிய மேம்பாலங்கள் உள்பட சென்னையில் உள்ள 75 மேம்பாலங்களையும் மூடுவதற்கு போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் அருண் உத்தரவிட்டார். அதன்பேரில் நேற்று இரவு 10 மணிக்கு மேல் சென்னையில் உள்ள அனைத்து மேம்பாலங்களையும் இரும்பு தடுப்புகளை வைத்து, போக்குவரத்து போலீசார் மூடிவிட்டனர்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக யாரும் போராட்டத்தில் ஈடுபட்டுவிடக்கூடாது என்பதற்காக, மெரினாவில் கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் சந்தேகத்துக்கு இடமானவர்களை தீவிரமாக கண்காணித்தனர்.

விபத்து-உயிரிழப்பு இல்லாத புத்தாண்டை கொண்டாட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் அருண் நேற்று இரவு தெரிவித்தார்.

மேலும் செய்திகள்