தேர்தல் தோல்வி எதிரொலி: குடிநீர் தொட்டிகளை சேதப்படுத்தியதை கண்டித்து கிராம மக்கள் மறியல்

தேர்தல் தோல்வி எதிரொலியாக குடிநீர் தொட்டிகளை சேதப்படுத்தியதை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2020-01-03 22:15 GMT
ஆலங்குடி,

ஆலங்குடி அருகே உள்ள அரையப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிங்காரம் மற்றும் வன்னியன் விடுதி துரை உள்பட 4 பேர் போட்டியிட்டனர். இதில் துரை வெற்றி பெற்றார்.

இதில் ஆத்திரமடைந்த சிங்காரத்தின் ஆதரவாளர் ஒருவர், சிங்காரம் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும்போது அமைக்கப்பட்ட 6 சிறிய குடிநீர் தொட்டிகளை சேதப்படுத்தினார். இதனால் அந்த பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் தடைப்பட்டது. இதை கண்டித்தும், குடிநீர் தொட்டிகளை சேதப்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அப்பகுதி மக்கள் அரையப்பட்டி கடைதெருவில் ஆலங்குடி-அறந்தாங்கி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அதனை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குடிநீர் தொட்டிகள் சேதப்படுத்தப்பட்ட புகாரின் பேரில் அதே பகுதியை சேர்ந்த கருப்பையா மகன் மெய்யப்பன் மீது ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்