மூதாட்டியை கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை - தஞ்சை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

மூதாட்டியை கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

Update: 2020-01-03 22:45 GMT
தஞ்சாவூர், 

தஞ்சை மாவட்டம் மதுக்கூரை அடுத்துள்ளது வேப்பங்குளத்தை சேர்ந்தவர் கிளியம்மாள்(வயது 85). கணவர் இறந்து விட்டதால் கிளியம்மாள் தனியாக வசித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவருடைய மனைவி செல்வி (39). கிளியம்மாள் மருத்துவமனைக்கு சென்றாலோ அல்லது வெளியில் சென்றாலோ செல்வியை துணைக்கு அழைத்துச் செல்வது வழக்கம்

அதன்படி கடந்த 10-3-2016 அன்று கிளியம்மாள் நாட்டுச்சாலையில் உள்ள மருத்துவமனைக்கு செல்வதற்காக செல்வி வீட்டிற்கு வந்தார். அப்போது கிளியம்மாள் 2 பவுன் சங்கிலி, 3 பவுன் வளையல்கள் மோதிரங்கள் என மொத்தம் 7¼ பவுன் நகை அணிந்திருந்தார்.

கிளியம்மாள் அணிந்திருந்த நகைகளை பார்த்த செல்விக்கு அந்த நகைகளின் மீது ஆசை ஏற்பட்டுள்ளது. அந்த நகைகளை அபகரிக்க முயற்சி செய்த செல்வி நகைகளை தனக்கு தருமாறு கிளியம் மாளிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்து விட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த செல்வி அருகில் கிடந்த கட்டையை எடுத்து கிளியம்மாளை சரமாரியாக தாக்கினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் கிளியம்மாள் அணிந்திருந்த நகைகளை செல்வி எடுத்துக்கொண்டு, கிளியம்மாள் உடலை ஒரு சாக்கில் கட்டி சாலையில் வீசி விட்டார்.

இது குறித்து மதுக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வியை கைது செய்தனர். இந்த வழக்கு தஞ்சை மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

நீதிபதி எழிலரசி வழக்கை விசாரித்து செல்விக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதம் கட்ட தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து உத்தர விட்டார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் தேன்மொழி ஆஜரானார்.

மேலும் செய்திகள்