கோலியனூர், கண்டமங்கலம் ஒன்றியங்களில் பிரதமரின் வீடு கட்டும் திட்டப்பணியை கலெக்டர் ஆய்வு

கோலியனூர், கண்டமங்கலம் ஒன்றியங்களில் பிரதமரின் வீடு கட்டும் திட்டப்பணியை கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு செய்தார்.

Update: 2020-01-04 22:30 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் அருகே கோலியனூர் ஊராட்சி ஒன்றியம் மழவராயனூர் ஊராட்சிக்கு உட்பட்ட சுந்தரிப்பாளையம் கிராமத்தில் நடைபெற்று வரும் பிரதமரின் வீடு கட்டும் திட்ட கட்டுமான பணிகளை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பணிகளின் தரத்தை ஆய்வு செய்த அவர் கட்டுமான பணிக்கு தரமான கம்பிகள், ஜல்லிகள், செங்கற்கள் உபயோகப்படுத்தப்படுகிறதா? என்பதையும் பரிசோதித்தார். தொடர்ந்து, இந்த பணிகளுக்கு உரிய நிதிகள் சரியாக வழங்கப்படுகிறதா? என்று கேட்டறிந்ததோடு கட்டுமான பணிகளை 50 நாட்களுக்குள் முழுமையாக முடிக்க வேண்டும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து அங்குள்ள கிராம மக்களிடம் குடிநீர், தெரு மின்விளக்கு வசதிகள் குறித்து கலெக்டர் அண்ணாதுரை கேட்டறிந்தார். பின்னர் முதியோர் உதவித்தொகை முறையாக கிடைக்கிறதா? எனவும் கேட்டறிந்தார்.

அதனை தொடர்ந்து கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியம் வி.அகரம் கிராமத்திற்கு சென்ற கலெக்டர், அங்கு நடைபெற்று வரும் அரசின் வீடு கட்டும் திட்ட கட்டுமான பணியையும் பார்வையிட்டு தரத்தை ஆய்வு செய்ததோடு பணியை விரைந்து முடிக்கும்படி அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன், உதவி கலெக்டர் (பயிற்சி) சிவகிரு‌‌ஷ்ணமூர்த்தி உள்பட பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்