தஞ்சை அருகே அய்யப்ப பக்தர்கள் சென்ற பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது 15 பேர் படுகாயம்

தஞ்சை அருகே அய்யப்ப பக்தர்கள் சென்ற பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2020-01-05 23:00 GMT
சாலியமங்கலம்,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் டி.ஆர்.பட்டினம் பகுதியில் இருந்து அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு பஸ்சில் நேற்று அதிகாலை புறப்பட்டனர். அந்த பஸ்சில் டிரைவர் உள்பட 38 பேர் பயணித்தனர். புதுச்சேரியை சேர்ந்த பிரபாகரன் (வயது30) என்பவர் பஸ்சை ஓட்டி சென்றார்.

தஞ்சை அருகே சாலியமங்கலம் அங்காளம்மன் கோவில் பகுதியில் ஒரு வளைவில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்து, உருண்டது.

மருத்துவமனையில் சிகிச்சை

இந்த விபத்தில் நாகப்பட்டினம் அகரகொத்தகை பகுதியை சேர்ந்த ராஜரெத்தினம் (38), சோமாஸ்காந்தன் (40), கந்தபழனி (43), சண்முகசுந்தரம் (30), முரளி (30), கிரு‌‌ஷ்ணமூர்த்தி (23), குமார் (48), பிரபாகரன் (13), ஹரீஸ்குமார் (17), கார்த்திகேயன் (42), ராஜ்குமார் (45), ஜெயராமன் (45), திட்டச்சேரியை சேர்ந்த செந்தில்குமார் (34), திருஞானசம்பந்தம் (69) மற்றும் டிரைவர் பிரபாகரன் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

இவர்கள் உடனடியாக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்