கரூர் அருகே கிணற்றில் மூழ்கி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சாவு

கரூர் அருகே சக நண்பர்களுடன் கிணற்றில் குளித்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

Update: 2020-01-05 23:00 GMT
நொய்யல்,

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள நாகானம்பட்டியை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன் கவின் (வயது 17). இவர் கரூர் அருகே தளவாபாளையத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜீனியரிங் கல்லூரி விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று காலை கல்லூரி விடுதியில் இருந்து பாஸ் வாங்கி கொண்ட கவின் தனது சகநண்பர்கள் 5 பேருடன் சாப்பிட்டு வருவதாக கூறி விட்டு, விடுதியில் இருந்து வெளியே சென்றார். பின்னர் கல்லூரி அருகே உள்ள ஒரு உணவகத்தில் கவின் தனது நண்பர்களுடன் சாப்பிட்டார். தொடர்ந்து குளிப்பதற்காக மலையம்பாளையத்தில் உள்ள தோட்டத்து கிணற்றுக்கு நண்பர்களுடன் கவின் சென்றார்.

கிணற்றில் மூழ்கினார்

பின்னர் கவின் தனது நண்பர்களுடன் கிணற்றில் இறங்கி குளித்து கொண்டி ருந்தார். சிறிது நேரத்தில் நண்பர்கள் 5 பேரும் வெளியேறினார். ஆனால் கவின் மட்டும் வெளியேவரவில்லை. மேலும் அவர் கிணற்றில் மூழ்கியது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கல்லூரி மாணவர்கள் அங்கிருந்த பொதுமக்களிடம் தகவல் தெரிவித்தனர். உடனடியாக கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கவினை தேடினர். இதில் நீண்ட நேரத்திற்கு பிறகு கவின் பிணமாக மீட்கப்பட்டார்.

இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் கவினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்