ஊராட்சி மன்ற தலைவராக பதவி ஏற்க விடாமல் தடுப்பதை கண்டித்து - கடலூரில், பொதுமக்கள் சாலைமறியல்

குமளங்குளம் ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்ற விஜயலட்சுமியை பதவி ஏற்க விடாமல் ஒரு தரப்பினர் தடுப்பதை கண்டித்து கடலூரில் நடுவீரப்பட்டு காலனி பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

Update: 2020-01-06 22:45 GMT
கடலூர்,

குமளங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட விஜயலட்சுமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் நேற்று வாண்டராசன்குப்பம் கிராம சேவை மையத்துக்கு பதவி ஏற்க சென்றார். ஆனால் அவரை பதவி ஏற்க விடாமல் ஜெயலட்சுமியின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜயலட்சுமிக்கு பதவி ஏற்பு விழா நடத்தக்கோரி அவரது ஆதரவாளர்களும், பொதுமக்களும் மதியம் 2.30 மணி அளவில் கடலூர் ஒன்றிய அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கடலூர்- நெல்லிக்குப்பம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் விஜயலட்சுமிக்கு பதவி ஏற்பு விழா நடத்த வேண்டும் என்று கோ‌‌ஷங்களை எழுப்பினர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உதயகுமார், பால்சுதர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இது பற்றி நீங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் மனு கொடுங்கள். அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறி, அவர்களை சமாதானம் செய்தனர். பின்னர் அவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியனிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், குமளங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட விஜயலட்சுமி வெற்றி பெற்றார். அவர் பதவி ஏற்பு விழாவுக்கு செல்லும் போது, ஒரு தரப்பினர் அவரை பதவி ஏற்க செல்லவிடாமல் தடுத்து, ஆயுதங்களால் தாக்கி விரட்டி உள்ளனர். இதற்கு போலீசாரும் உறுதுணையாக இருக்கிறார்கள். ஆகவே விஜயலட்சுமி பதவி ஏற்க கிராமத்திலேயே ஏற்பாடு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

மனுவை பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர், இந்த மனுவை கலெக்டருக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதற்கிடையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைசெல்வன் மற்றும் நிர்வாகிகள் வட்டார வளர்ச்சி அலுவலரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து அவர்கள் இது பற்றி கோர்ட்டில் வழக்கு தொடர்வதாக அறிவித்து சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் ஒன்றிய அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்