பெங்களூருவில் திரைப்பட நகரம் அமைக்க இடம் தயார்; துணை முதல்-மந்திரி பேட்டி

பெங்களூருவில் திரைப்பட நகரம் அமைக்க இடம் தயாராக உள்ளது என்று துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார்.

Update: 2020-01-09 00:00 GMT
பெங்களூரு, 

முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் ஆலோசனை கூட்டங்கள் பெங்களூரு கிருஷ்ணா அரசு இல்லத்தில் நேற்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சிகளில் எடியூரப்பா பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பங்கேற்று கூட்டங்களை நடத்தினார். இந்த கூட்டத்திற்கு பிறகு அஸ்வத் நாராயண் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பெங்களூருவில் திரைப்பட நகரம் அமைக்க இடம் தயாராக உள்ளது. இதுகுறித்து முதல்-மந்திரியுடன் கலந்து ஆலோசனை நடத்தி அவர் அனுமதி வழங்கிய பிறகு அந்த இடம் இறுதி செய்யப்படும். சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் பல இடங்களில் உள்ள திரைப்பட நகரங்களை நேரில் பார்வையிட்டுள்ளோம். அவற்றைவிட சிறப்பான முறையில் திரைப்பட நகரம் அமைக்க வேண்டும் என்பது மாநில அரசின் கனவாகும்.

அனிமேஷன் மையம், படப்பிடிப்பு, படப்பிடிப்புக்கு பிறகு செய்ய வேண்டிய பணிகள் குறித்த வசதிகள் திரைப்பட நகரில் இடம் பெற வேண்டும். சுற்றுலாவுக்கு ஏற்ற வகையில் இந்த நகரம் உருவாக்கப்படும். இதுகுறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். பெங்களூரு நகரம், உலகத்திற்கு அனிமேஷன் தொழில்நுட்பத்தை கொடுத்துள்ளது. ‘அவதார்’, ‘லயன் கிங்’ போன்ற ஆங்கில படங்களின் அனிமேஷன் பெங்களூருவில் தான் செய்யப்பட்டது. அதனால் தான் பெங்களூருவில் திரைப்பட நகரம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாக இது உருவாக்கப்படும்.

பெங்களூரு அருகே உள்ள தேவிகாராணி-ரோரிச் ஆகியோரின் தோட்டம் உள்ளது. அது திரைப்படம், கலை, கலாசாரம், இயற்கை அழகை உள்ளடக்கிய அற்புதமான தலம் ஆகும். இதனால் அங்கேயே கலை மற்றும் கைவினை கிராமத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த தோட்டத்தை இந்த நாடே பெருமைப்படும் அளவுக்கு மேம்படுத்தப்படும்.

பெங்களூருவில் உள்ள சர்வதேச விமான நிலைய வளாகத்தில் 80 அடி உயரம் கொண்ட கெம்பேகவுடா சிலை அமைப்பது குறித்தும், கெம்பேகவுடா உருவாக்கிய 46 இடங்களை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. சர்வதேச விமான நிலைய வளாகத்தில் 23 ஏக்கர் பரப்பளவில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்க திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.

மேலும் செய்திகள்