மங்களூரு கலவரத்திற்கு யார் காரணம்? திடுக்கிடும் புதிய வீடியோ காட்சிகளை வெளியிட்ட குமாரசாமி

மங்களூரு கலவரத்திற்கு யார் காரணம்? என்பது குறித்து திடுக்கிடும் வகையில் புதிய வீடியோ காட்சிகளை முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். குமாரசாமியின் செயலுக்கு பா.ஜனதா தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Update: 2020-01-11 00:00 GMT
பெங்களூரு, 

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது மங்களூரு கலவரம் தொடர்பாக திடுக்கிடும் வகையில் புதிய வீடியோ காட்சிகள் அடங்கிய சி.டி.யை அவர் வெளியிட்டு கூறியதாவது:-

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து மங்களூருவில் சிலர் போராட்டம் நடத்தினர். இதில் கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்துக்கு போராட்டக்காரர்களே காரணம் என்று போலீசார் வீடியோ காட்சிகளை வெளியிட்டனர். இந்த பிரச்சினையை சட்டசபையில் கிளப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் அது தொடர்பான வீடியோ காட்சிகளை நான் சேகரித்தேன். இதன்மூலம் மங்களூரு கலவரத்திற்கு யார் காரணம்? என்பது விரைவில் தெரியவரும்.

மங்களூருவில் ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கோபால்கவுடா, ஜனதா அதாலத் நடத்த போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதனால் அந்த வன்முறை தொடர்பான வீடியோக்களை நான் வெளியிட வேண்டிய நிலை ஏற்பட்டது. மங்களூரு வன்முறை குறித்து மாஜிஸ்திரேட்டு விசாரணை தேைவ இல்லை. மாஜிஸ்திரேட்டாக நியமிக்கப்பட்டு உள்ளவர் ஒரு மாவட்ட கலெக்டர். அவர் எந்த அடிப்படையில் விசாரணை நடத்துவார் என்பது எங்களுக்கு தெரியும்.

இந்த கலவரத்தில் 2 அப்பாவிகள் மரணம் அடைந்துள்ளனர். 10 பேர் காயம் அடைந்துள்ளனர். ஆனால் போலீசார் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வன்முறை நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வெளியிட வேண்டும். சரக்கு ஆட்டோவில் கற்களை எடுத்து வந்ததாக போலீசார் கூறுகிறார்கள். ஆனால் அந்த ஆட்டோவில் கட்டிட கழிவுகள் கொண்டு செல்லப்பட்டன. வன்முறை காரணமாக அந்த ஆட்டோவை அங்கேயே நிறுத்திவிட்டு சென்றுவிட்டனர். ஆனால் போலீசார், அந்த ஆட்டோவில் கற்கள் கொண்டுவரப்பட்டதாக சொல்கிறார்கள்.

மாநில அரசும், போலீசாரும் தங்களின் தவறுகளை மூடிமறைக்க தவறான கதைகளை உருவாகியுள்ளனர். கர்நாடகத்தை இன்னொரு காஷ்மீராக உருவாக்க இந்த அரசு முயற்சி செய்கிறதா?. மாநிலத்தில் உள்ள 30 மாவட்டங்களிலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அமைதியான முறையில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எங்கும் வன்முறை உண்டாகவில்லை. மங்களூருவில் மட்டும் வன்முறை நடந்தது ஏன்?. ஒருவேளை அதிகாரிகள் தவறு செய்யவில்லை என்றால், நீதிபதி கோபால்கவுடாவின் ஜனதா அதாலத் நடத்த அனுமதி வழங்காதது ஏன்?.

கர்நாடகத்தில், அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயல் நடக்கிறது. இன்று (அதாவது நேற்று) சந்திர கிரகணம் நடக்கிறது. ஆனால் கர்நாடகத்தில் அரசியல் கிரகணத்தை விலக்குவது யார்?. கர்நாடக மந்திரிசபை விரிவாக்கத்திற்கு பிறகு அரசியலில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதந்திர போராட்டம் நடைபெற்றபோது கூட அரசு எந்திரம் இவ்வாறு தவறாக பயன்படுத்தப்படவில்லை.

நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துவிட்டது. பொருளாதார வளர்ச்சி சரிந்துவிட்டது. இவற்றை சரிசெய்ய கவனம் செலுத்துவதற்கு பதிலாக மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தில் அதிக அக்கறையுடன் செயல்படுகிறது. மகதாயி பிரச்சினையை தீர்க்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மத்திய அரசிடம் இருந்து, மாநில அரசு அதிக நிதி உதவியை பெற வேண்டு்ம். நான் முதல்-மந்திரியாக இருந்திருந்தால், கர்நாடகத்தில் உள்ள நிதி ஆதாரங்களை பயன்படுத்தி வெள்ள நிவாரண பணிகளை சிறப்பான முறையில் மேற்கொண்டிருப்பேன்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

குமாரசாமி வெளியிட்ட வீடியோவில் போராட்டக்காரர்களை போலீசார் தடி மூலம் தாக்கும் காட்சிகளும், சரக்கு ஆட்டோவில் கட்டிட கழிவுகள் கொண்டு வரப்படும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. குமாரசாமியின் இந்த நடவடிக்கையை பா.ஜனதா தலைவர்கள் கண்டித்துள்ளனர்.

மேலும் செய்திகள்