மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்தமாக குளித்தனர்.

Update: 2020-01-11 22:15 GMT
அம்பை, 

நெல்லை மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று மணிமுத்தாறு அருவி. இந்த அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும். இதனால் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிக்கு வந்து ஆனந்தமாக குளித்து செல்வர்.

இந்த அருவிக்கு செல்லும் சாலையை சீரமைப்பதற்காக, கடந்த ஆண்டு மே மாதம் முதல் சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. சாலை சீரமைப்பு பணி இன்னும் முழுமையாக முடியவில்லை. இருப்பினும், மாஞ்சோலைக்கு அந்த வழியாக அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில் மணிமுத்தாறு அருவி மற்றும் அணைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். வருகிற 15-ந்தேதி (புதன்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் மணிமுத்தாறு அருவிக்கு செல்ல வனத்துறையினர் அனுமதி அளித்து உள்ளனர்.

தற்போது அருவியில் தண்ணீர் அதிகளவில் கொட்டுகிறது. ஆனால் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருந்தது. இதனால் அவர்கள் கூட்ட நெரிசல் இன்றி அருவியில் ஆனந்தமாக குளித்து சென்றனர்.

மணிமுத்தாறு அணையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் படகு சவாரி சமீபத்தில் தொடங்கப்பட்டது. படகில் எந்திர பழுது காரணமாக தற்போது படகு சவாரி நிறுத்தப்பட்டு உள்ளது. படகில் பழுதை சரிசெய்து பொங்கல் விடுமுறை நாட்களில் படகு சவாரிக்கு ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும் என்று சுற்றுலா பயணிகள் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்