விவேகானந்தர் பிறந்தநாளையொட்டி கன்னியாகுமரி கடலில் கை, கால்களை கட்டியபடி நீந்தி சென்ற கேரள வீரர்

விவேகானந்தர் பிறந்தநாளையொட்டி கன்னியாகுமரி கடலில் கை, கால்களை கட்டியபடி கேரள வீரர் 800 மீட்டர் தூரத்தை ½ மணி நேரத்தில் நீந்தி சென்றார்.

Update: 2020-01-12 23:00 GMT
கன்னியாகுமரி,

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள கருநாகப்பள்ளியை சேர்ந்தவர் ரதீஷ்குமார் (வயது 31). நீச்சல் வீரரான இவர், கேரள சுற்றுலாத்துறையில் தண்ணீரில் தத்தளிப்பவர்களை மீட்கும் வீரராக செயல்பட்டு வருகிறார். இவருக்கு நீச்சலில் சாகசம் புரிவது மிகவும் விருப்பமானதாகும். கேரளாவில் பல நீர்நிலைகளில் இவர் நீச்சல் சாகசம் செய்து உள்ளார்.

சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம் நேற்று இளைஞர் தினமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று கன்னியாகுமரி கடலில் கை, கால்களை கட்டியபடி விவேகானந்தர் மண்டபத்துக்கு நீந்தி செல்ல உள்ளதாக ரதீஷ்குமார் அறிவித்து இருந்தார்.

800 மீட்டர் தூரம்

அதன்படி கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக படகுத்துறையில் இருந்து ஒரு வள்ளத்தில் ரதீஷ்குமாரை ஏற்றி சென்றனர். பின்னர் கடலில் சிறிது தூரம் சென்றதும் அவரது கை, கால்களை கட்டியதும் அவர் கடலில் குதித்து நீந்த தொடங்கினார். சுமார் அரை மணி நேரத்தில் அவர் 800 மீட்டர் தூரத்தை நீந்தி கடல் நடுவே அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் மண்டபத்தை அடைந்தார்.

அவருடைய பாதுகாப்புக்காக ஏக்நாத் என்ற படகில் கடலோர பாதுகாப்புக்குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன், சப்-இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், சுடலைமணி மற்றும் போலீசார் சென்றனர். படகுத்துறையில் நடந்த தொடக்க விழாவில் அய்யப்ப சேவா சமாஜம் மாவட்ட தலைவர் குமாரசாமி, அமைப்பாளர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் விவேகானந்தர் பாறையில் நீச்சல் வீரரை, விவேகானந்த கேந்திர மூத்த ஆயுட்கால ஊழியர் அங்கிராஸ், விவேகானந்தர் பாறை பொறுப்பாளர் சிவசுப்பிரமணியன், மக்கள்தொடர்பு அதிகாரி அவிநாஸ் ஆகியோர் வரவேற்றனர்.

மேலும் செய்திகள்