வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் அதிகாரி ஆய்வு

திருச்சி மாவட்டத்தில் 1,092 மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்றது. இதனை பத்திரப்பதிவு துறை தலைவரும், வாக்காளர் பட்டியல் பார்வையாளருமான ஜோதி நிர்மலா சாமி ஆய்வு செய்தார்.

Update: 2020-01-12 23:00 GMT
திருச்சி,

தமிழகத்தில் கடந்த மாதம் (டிசம்பர்) சுருக்க முறை திருத்தங்களுடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியல் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக் காக வைக்கப்பட்டு உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம் செய்ய விரும்புபவர்கள் உரிய ஆதாரங்களை காட்டி பெயர் சேர்க்கலாம், அல்லது திருத்தங்களை செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி திருச்சி மாவட்டம் முழுவதும் உள்ள 1,092 வாக்குச்சாவடி மையங்களிலும் நேற்று சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாம்களில் 1-1-2020 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை காட்டி வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்த்துக்கொள்ளவேண்டி விண்ணப்பங்கள் செய்தனர். இதேபோல முகவரி மாற்றம், தொகுதி மாற்றம் உள்ளிட்டவைகளுக்காகவும் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து விண்ணப்பம் செய்தனர். அரசியல் கட்சி பிரமுகர்கள் புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க உதவி செய்தனர்.

அதிகாரி ஆய்வு

தமிழக பத்திரப்புதிவு துறை தலைவரும், வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அதிகாரியுமான ஜோதி நிர்மலா சாமி நேற்று திருச்சி கேம்பியன் மேல்நிலைப்பள்ளி, சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நாகமங்கலம் பள்ளி, அளுந்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அவருடன் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், மாவட்ட வருவாய் அதிகாரி (பொறுப்பு) அன்பழகன் ஆகியோரும் சென்று இருந்தனர்.

மேலும் செய்திகள்