உள்ளாட்சி தேர்தலில் கட்சி விதிகளை மீறி போட்டியிட்டவர்கள் மீது நடவடிக்கை அமைச்சர் கே.சி.கருப்பணன் பேட்டி

உள்ளாட்சி தேர்தலில் கட்சி விதிகளை மீறி போட்டியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.

Update: 2020-01-12 23:00 GMT
பவானி,

பவானி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல் சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

சத்துணவு திட்டத்தில் காலை உணவு வழங்கப்படுவதாக தகவல் பரவி வருகிறது. இது தவறான தகவல். இதனை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மறுத்துள்ளார். ஊரக உள்ளாட்சி தேர்தலில் கட்சியின் விதிகளை மீறி தேர்தலில் போட்டியிட்டவர்கள் மீதும் கட்சிக்கு எதிராக பணியாற்றியவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் நகராட்சி மற்றும் பேரூராட்சிக்கான தேர்தலை ஆணையம் அறிவிக்கும்.

மு.க.ஸ்டாலின்

மேலும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களைக் கூறி மக்களை திசை திருப்பி குழப்பி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். ஆனால் மக்கள் தெளிவாக தான் உள்ளனர். இனிமேல் அவருடைய பேச்சு எந்த இடத்திலும் எடுபடாது.

இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.

அம்மாபேட்டை

இதேபோல் அம்மாபேட்டை அருகே குருவரெட்டியூரில் நடந்த விழாவில் அமைச்சர் கே.சி.கருப்பணன் நிருபர்களிடம் கூறும்போது, ‘பொதுமக்கள் அனைவரும் புகையில்லா பொங்கலை கொண்டாட வேண்டும். பழைய பிளாஸ்டிக் பொருட்கள், துணிகள், டயர்கள் போன்றவற்றை தீயிட்டு கொழுத்த கூடாது. இதன் மூலம் மாசு ஏற்படுவதை தடுக்கலாம். இந்திய அளவில் மாசு இல்லாத மாநிலமாக தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. தொடர்ந்து தமிழகம் மாசில்லா மாநிலமாக முன்னேற பொதுமக்கள் உதவியாக இருக்க வேண்டும்’ என்றார்.

மேலும் செய்திகள்