கடைவீதிகளில் அலைமோதிய பொதுமக்கள் கூட்டம்: பொங்கல் பொருட்கள் விற்பனை களைகட்டியது

வேலூர் மார்க்கெட்டில் பொங்கல் பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. 2 கரும்புகள் ரூ.100-க்கு விற்பனையானது.

Update: 2020-01-14 22:15 GMT
வேலூர், 

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. புதுப்பானையில் பச்சரிசியிட்டு பொங்கல் வைத்து கரும்பு, மஞ்சள்செடி வைத்து சூரியனுக்கு படைப்பார்கள். இதற்காக கரும்பு, மஞ்சள், காய்கறிகள் விற்பனை அதிகமாக இருக்கும்.

அதன்படி பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் அதிகம் விரும்பி வாங்கும் கரும்புகள் பண்ருட்டி, சிதம்பரம், சேத்தியாத்தோப்பு போன்ற பகுதிகளில் இருந்து நேற்று லாரிகளில் கொண்டுவந்து வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் இறக்கப்பட்டது.

அங்கிருந்து வியாபாரிகள், பொதுமக்கள் கரும்புகளை வாங்கிச்சென்றனர். வியாபாரிகள் 20 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.400 வரை கொடுத்து வாங்கிச்சென்றனர். 2 கரும்புகள் ரூ.100-க்கு விற்பனையானது. அதேபோன்று பொங்கல் பண்டிகைக்கு அதிகம் பயன்படுத்தும் மஞ்சள் குலைகளும் வேலூரை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து விற்பனைக்கு கொண்டுவரப் பட்டிருந்தது. 2 குலைகள் 60 ரூபாய்க்கு விற்பனையானது.

வண்ண வண்ண கோலப்பொடிகளும் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனைக்கு வைக்கப்பட்டன. அதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர். கால் கிலோ கோலப்பொடி ரூ.20-க் கும், ஒரு பாக்கெட் 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. காய்கறிகளை பொறுத்தவரையில் விலையில் மாற்றம் இல்லை என வியாபாரிகள் தெரிவித்தனர்.

பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் வாங்க வேலூர் மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அதேபோன்று ஜவுளிக்கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.

மேலும் செய்திகள்