பா.ஜனதா வெளியிட்ட புத்தக விவகாரம் யாரையும் சத்ரபதி சிவாஜியுடன் ஒப்பிட முடியாது உதயன் ராஜே போஸ்லே பேட்டி

பாரதீய ஜனதா வெளியிட்ட ‘இன்றைய சிவாஜி, மோடி’ புத்தகம் தொடர்பாக பேட்டி அளித்த உதயன் ராஜே போஸ்லே, யாரையும் சத்ரபதி சிவாஜியுடன் ஒப்பிட முடியாது என்று கூறினார்.

Update: 2020-01-14 23:00 GMT
மும்பை, 

பாரதீய ஜனதா வெளியிட்ட ‘இன்றைய சிவாஜி, மோடி’ புத்தகம் தொடர்பாக பேட்டி அளித்த உதயன் ராஜே போஸ்லே, யாரையும் சத்ரபதி சிவாஜியுடன் ஒப்பிட முடியாது என்று கூறினார்.

பா.ஜனதா புத்தகம்

பிரதமர் நரேந்திர மோடியை மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியுடன் ஒப்பிட்டு பஞ்சாபை சேர்ந்த பாரதீய ஜனதா தலைவர் ஜெய் பகவான் கோயல் எழுதியுள்ள ‘ஆஜ் கி சிவாஜி, நரேந்திர மோடி' (இன்றைய சிவாஜி நரேந்திர மோடி) என்ற புத்தகத்திற்கு மராட்டியத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

மாநிலத்தில் ஆட்சி அமைத்து உள்ள சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளதுடன், அந்த புத்தகத்திற்கு தடை விதிக்கவேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளன.

ஜெய் பகவான் கோயல் மீது போலீசிலும் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. மன்னர் சத்ரபதி சிவாஜியின் வழித்தோன்றல்களான பாரதீய ஜனதா மாநிலங்களவை எம்.பி. சத்ரபதி சம்பாஜி ராஜே, சிவேந்திரராஜே போசலே எம்.எல்.ஏ. ஆகியோரும் அதிருப்தி தெரிவித்தனர்.

யாரையும் ஒப்பிட முடியாது

இது தொடர்பாக நேற்று சத்ரபதி சிவாஜியின் வம்சாவளியும், தேசியவாத காங்கிரசில் இருந்து பாரதீய ஜனதாவில் சேர்ந்த முன்னாள் எம்.பி. உதயன் ராஜே போஸ்லே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரையும் மறைமுகமாக தாக்கினார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

யாரையும் மன்னர் சத்ரபதி சிவாஜியுடன் ஒப்பிட முடியாது. அவர் மட்டும் தான் தனது மக்களை பற்றி அனைத்தையும் அறிந்த ஜனதா ராஜா (மக்களின் மன்னர்).

மற்ற யாரையாவது மக்களின் மன்னர் என்று அழைத்தால் அது சத்ரபதி சிவாஜியை இழிவுபடுத்துவதாகும். எனவே வேறு யாரையாவது மக்களின் மன்னர் என அழைப்பதற்கு முன் சிந்தியுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை அவரது கட்சியினர் ‘ஜனதா ராஜா' என அழைப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்