தஞ்சையில், முன்விரோதத்தில் டாஸ்மாக் கடை எதிரில் 2 பேர் வெட்டிக்கொலை 4 பேர் கைது

தஞ்சையில், முன் விரோதம் காரணமாக டாஸ்மாக் கடை எதிரில் 2 பேரை வெட்டிக்கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-01-16 23:15 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை வடக்குவாசல் இரட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பெஞ்சமின். இவருடைய மகன் செபஸ்டின்(வயது 30). மெக்கானிக்கான இவர், பொங்கல் பண்டிகை தினமான நேற்று முன்தினம் மாலை தனது நண்பரான விளார் சாலை தில்லை நகரை சேர்ந்த குமரேசன் மகன் சதீஷ்குமாருடன்(26) வடக்குவாசல் சிரேஸ்சத்திரம் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை எதிரே நின்று கொண்டிருந்தார். அப்போது இவர்களுக்கும், அங்கே வந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அந்த நேரத்தில் மது குடித்துவிட்டு டாஸ்மாக் கடை வளாகத்தை விட்டு வெளியே வந்த வடக்குவாசல் காளியம்மன் கோவில் காலனி பழைய நெல்லுமண்டி தெருவை சேர்ந்த காளிதாஸ் மகன் சக்திவேல்(36), தகராறு செய்து கொண்டிருந்த இரு தரப்பினரையும் சமரசம் செய்து வைத்தார். ஆனால் அவர்களுக்குள் சமரசம் ஏற்படாததால் ஆத்திரம் அடைந்த சிலர், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் செபஸ்டினையும், சதீஷ்குமாரையும் வெட்டினர். சமரசம் செய்ய சென்ற சக்திவேலும் இவர்களது கூட்டாளி என நினைத்து அவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

2 பேர் சாவு

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சக்திவேல் பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை செபஸ்டின் பரிதாபமாக இறந்தார். சதீஷ்குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக தஞ்சை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

முன்விரோதம்

வடக்குவாசல் இரட்டை பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டனுக்கும், மகாதேவனுக்கும் இடையே கடந்த மாதம் கிரிக்கெட் விளையாடியபோது தகராறு ஏற்பட்டது. இதில் மணிகண்டன் தாக்கப்பட்டார். அவருக்கு ஆதரவாக செபஸ்டின் செயல்பட்டார். எதிர்தரப்பினருக்கு ஆதரவாக வடக்குவாசல் ஏ.வி.பதி நகரை சேர்ந்த சூர்யா செயல்பட்டதால் இவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது.

இந்தநிலையில் சூர்யா, தனது நண்பர்கள் 2 பேருடன் பழைய நெல்லுமண்டி தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கே தனது நண்பர்களுடன் நின்று கொண்டிருந்த செபஸ்டின், இவர்களை அழைத்து இங்கே எதற்காக வந்தீர்கள்? என கேட்டதுடன் அவர்களில் ஒருவரை அடித்து விட்டார்.

இதனால் சூர்யா உள்பட 3 பேரும் அங்கிருந்து ஓடி வந்தபோது சூர்யாவின் செல்போன் தவறி விழுந்துவிட்டது. செல்போன் எங்கே விழுந்தது என்பதை கண்டறிவதற்காக நண்பரின் செல்போன் மூலம் தனது செல்போனை சூர்யா தொடர்பு கொண்டார்.

டாஸ்மாக் கடை எதிரில்...

அந்த செல்போன் செபஸ்டின் கையில் இருந்ததால், ரிங் வந்தவுடன் செல்போனை ஆன் செய்து அவர் பேசியுள்ளார். எதிர்முனையில் பேசிய சூர்யா, எனது செல்போனை கொண்டு வந்து தந்துவிடுங்கள். நமக்குள் எந்த பிரச்சினையும் வேண்டாம் என கூறியுள்ளார். இதை உண்மையென நம்பிய செபஸ்டின், தனது நண்பர் சதீஷ்குமாரை அழைத்துக்கொண்டு சிரேஸ்சத்திரம் ரோட்டில் ராஜாகோரி சுடுகாடு அருகே உள்ள டாஸ்மாக் கடையின் எதிரே சென்றார். அப்போது இவர்களுக்கும், சூர்யா தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த எதிர் தரப்பினர், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் செபஸ்டின், சதீஷ்குமார் மற்றும் சமரசம் செய்ய முயன்ற சக்திவேல் ஆகிய 3 பேரையும் வெட்டிவிட்டு தப்பி சென்று விட்டனர். படுகாயம் அடைந்த சக்திவேல், செபஸ்டின் ஆகியோர் இறந்தனர்.

மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

4 பேர் கைது

இதையடுத்து வடக்குவாசல் ஏ.வி.பதி நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சுந்தரமூர்த்தி(21), ரமேஷ் மகன் சூர்யா(20), மேலலயன் பகுதியை சேர்ந்த பன்னீர் மகன் செல்வக்குமார்(22), வடக்குவீதி பிள்ளையார் கோவில் எதிர்சந்து பகுதியை சேர்ந்த ராமலிங்கம் மகன் வெங்கடேஸ்வரன்(22) ஆகிய 4 பேரையும் மேற்கு போலீசார் நேற்று கைது செய்தனர்.

மேலும் செய்திகள்