காணும் பொங்கலை முன்னிட்டு அகஸ்தியர் அருவி-களக்காடு தலையணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

காணும் பொங்கலை முன்னிட்டு அகஸ்தியர் அருவி, களக்காடு தலையணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நெல்லை அறிவியல் மையத்தில் குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனர்.

Update: 2020-01-16 22:00 GMT
விக்கிரமசிங்கபுரம், 

பொங்கல் பண்டிகையின் மறுநாள் மாட்டு பொங்கல் என்ற போதிலும் நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் அந்நாளை காணும் பொங்கலாக கொண்டாடி வருகின்றனர். இந்தநிலையில் காணும் பொங்கல் தினமான நேற்று பாபநாசம், அகஸ்தியர் அருவி மற்றும் சொரிமுத்து அய்யனார் கோவில் தாமிரபரணி ஆற்றில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

பாபநாசம் வனத்துறை சோதனை சாவடியில் கடுமையான சோதனைக்கு பின்னரே வாகனங்கள் அனுப்பப்பட்டன. மக்கள் இப்பகுதிகளுக்கு தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கார், வேன்களில் வந்ததால் வனப்பகுதிகளில் பல இடங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

இந்தநிலையில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்ப்பதற்காக வனப்பகுதிக்குள் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் வந்த பஸ்கள் அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டது. முக்கியமாக அகஸ்தியர் அருவியில் வாகனங்களை விடுவதற்கு இடமில்லாமல் திண்டாடியதோடு மோட்டார்சைக்கிளில் மற்றும் நடந்து சென்றவர்களும் வழியில்லாமல் திண்டாடினார்கள். ஆனாலும் காணும் பொங்கலையொட்டி பாபநாசம், அகஸ்தியர் அருவி, காணிக்குடியிருப்பு சொரிமுத்து அய்யனார் கோவில் தாமிரபரணி ஆறு பகுதிகளில் மக்கள் உற்சாகமாக குளித்து பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

களக்காடு தலையணை, வடக்கு பச்சையாறு அணைப்பகுதி, தேங்காய் உருளி அருவி உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் குடும்பத்தோடு குவிந்தனர்.

நெல்லை மாநகர பகுதியில் காணும் பொங்கலையொட்டி அறிவியல் மையத்தில் பொதுமக்கள் குவிந்தனர். அங்கு பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காட்சி அளித்தது.

பெண்கள் தங்கள் குடும்பத்தினருடன் அறிவியல் மையத்திற்கு வந்து இருந்தனர். வீட்டில் சமைத்த உணவை அறிவியல் மையத்திற்கு கொண்டு வந்து சாப்பிட்டனர். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரம் பெருமாள் கோவிலிலும் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் நேற்று நெல்லை மாநகர பகுதியில் உள்ள பாளையங்கோட்டை மார்க்கெட், மேலப்பாளையம், நெல்லை டவுன், தச்சநல்லூர், பாளையங்கோட்டையில் உள்ள இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதியது. இதேபோன்று மாவட்டம் முழுவதும் காலை முதலே இறைச்சி கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆட்டு இறைச்சி ஒரு கிலோ ரூ.650-க்கும், பிராய்லர் கோழி உயிருடன் கிலோ ரூ.120-க்கும், உரித்தது கிலோ ரூ.180-க்கும், நாட்டுக் கோழி உயிருடன் கிலோ ரூ.250-க்கும், உரித்தது கிலோ ரூ.350-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்