இளைஞர் விளையாட்டு போட்டிகள் - அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற அம்மா இளைஞர் விளையாட்டு போட்டிகளை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.

Update: 2020-01-16 22:30 GMT
சிவகங்கை, 

சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், இலந்தங்குடிப்பட்டி கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அம்மா இளைஞர் விளையாட்டு போட்டி தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். மானாமதுரை எம்.எல்.ஏ. நாகராஜன் முன்னிலை வகித்தார். காஞ்சிரங்கால் ஊராட்சி தலைவர் மணிமுத்து வரவேற்று பேசினார். அமைச்சர் பாஸ்கரன் கலந்துகொண்டு இளைஞர் விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கிராமப்புற இளைஞர்கள் கல்வி மற்றும் விளையாட்டில் சாதனை படைத்திட பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார். இதனால் கிராம பகுதியிலுள்ள இளைஞர்கள், விளையாட்டில் தேசிய அளவில் பல்வேறு விருதுகளைப் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

அந்தவகையில் தற்போதைய முதல்-அமைச்சர் கிராமப்பகுதியிலுள்ள இளைஞர்களின் ஆரோக்கியம் மற்றும் மனவளத்தை மேம்படுத்தவும், கூட்டுமனப்பான்மையை உருவாக்கவும், விளையாட்டுத்திறனை ஊக்குவிக்கும் வகையில் ரூ.76 கோடியே 23 லட்சத்து 9 ஆயிரத்து 300 மதிப்பீட்டில் 12,524 கிராம ஊராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில் அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஊராட்சியிலும் ஊரக வளர்ச்சித்துறையுடன் மாவட்ட விளையாட்டுத்துறை ஒருங்கிணைந்து விளையாட்டு மைதானங்களை உருவாக்கி அதில் கபடி, கைப்பந்து, கிரிக்கெட், பூப்பந்து ஆகிய விளையாட்டுகள் நடைபெறும் வகையில் அமைக்கப்பட்டதுடன், அதற்குரிய பயிற்சி வழங்கவும் பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த திட்டத்தால் கிராமப்பகுதியிலுள்ள இளைஞர்கள் விளையாட்டிலும் கவனம் செலுத்தி சாதனை படைக்க பயனுள்ளதாக இருக்கும்.

அந்தவகையில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தில் சிவகங்கை மாவட்டத்திற்கு ரூ.2 கோடியே 66 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வரப்பெற்றுள்ளது. மாவட்டத்தில் 445 ஊராட்சிகள், 12 பேரூராட்சிகளில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பின்னர் விளையாட்டு உபகரணங்களை அமைச்சர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், மாவட்ட விளையாட்டு அலுவலர் தீர்த்ததோஸ், சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மஞ்சுளா பாலசந்தர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் கருப்பையா, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு அச்சகத் தலைவர் சசிக்குமார் சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் கேசவன், வட்டார வளர்ச்சி அலுவலர் பழனியம்மாள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி திட்ட அலுவலர் செல்வராஜ் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்