அகஸ்தீஸ்வரத்தில் விழா: பொங்கல் பண்டிகை கொண்டாடிய வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

அகஸ்தீஸ்வரத்தில் பொங்கல் பண்டிகையை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கொண்டாடினர். அப்போது அவர்கள் பொங்கலிட்டும், கரகம் ஆடியும் மகிழ்ந்தனர்.

Update: 2020-01-16 23:00 GMT
கன்னியாகுமரி,

கன்னியாகுமரியை அடுத்த அகஸ்தீஸ்வரம் முத்தாரம்மன் கோவில் திடலில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழா நடைபெறும்.

பொங்கல் நாளன்று நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் இந்திய கலாச்சாரத்தை வெளிநாட்டினர் அறிந்து கொள்ளும் வகையில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அழைத்து வந்து விழா நடத்துவது வழக்கம்.

251 பானைகளில்...

இந்த ஆண்டும் அகஸ்தீஸ்வரம் முத்தாரம்மன் கோவில் திடலில் பொங்கல் விழா நடந்தது. அதிகாலையிலேயே ஏராளமான பொதுமக்கள் கோவில் திடலில் குவிந்தனர். காலை 6 மணி அளவில் 251 பானைகளில் பெண்கள் பொங்கலிடும் நிகழ்ச்சி நடந்தது.

அப்போது கன்னியாகுமரியில் தங்கியிருந்த ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களும், நாகலாந்து, மிசோரம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வெளிமாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் வேன்களில் அகஸ்தீஸ்வரத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

மேளதாளம் முழங்க வரவேற்பு

அகஸ்தீஸ்வரம் வந்த அவர்களுக்கு குமரி மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் மாலை அணிவித்து மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பிறகு 251 பானைகளில் பொங்கலிடும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், அகஸ்தீஸ்வரம் மக்களோடு இணைந்து பொங்கலிட்டனர்.

அதாவது, அடுப்பில் விறகு வைத்து தீ மூட்டுவது, பானைகளில் தண்ணீர் ஊற்றி அரிசி போடுவது, பானை பொங்கி வரும் போது குலவையிடுவது என அனைத்தையும் பொதுமக்களோடு இணைந்து செய்தனர். மேலும் பானை பொங்கி வரும் போது பொங்கலோ, பொங்கல் என்று ஒருசேர கூறியது அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

கரகம் எடுத்து ஆடினர்

தொடர்ந்து தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம், களரி, நையாண்டிமேளம், கரகாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கரகாட்ட கலைஞர்களுடன் இணைந்து தலையில் கரகம் வைத்து ஆடினர். இது அங்கிருந்த அனைவரையும் கவர்ந்தது.

நிகழ்ச்சியில் குமரி மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரி நெல்சன், அகஸ்தீஸ்வரம் குலசேகர விநாயகர் அறநிலைய தலைவர் கருணாகரன், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை அகஸ்தீஸ்வரம் குலசேகர விநாயகர் அறநிலைய அறங்காவலர்கள் மற்றும் மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரிகள் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்