சுற்றுலாத்துறை சார்பில் வெளிநாட்டினர் கொண்டாடிய பொங்கல் விழா

சோழவந்தானில் சுற்றுலாத்துறை சார்பில் வெளிநாட்டினர் பொங்கல் விழா கொண்டாடினர்.

Update: 2020-01-16 22:15 GMT
சோழவந்தான்,

சோழவந்தான் ஜெனகை நாராயணபெருமாள் கோவில் வளாகத்தில் மதுரை மாவட்டம் சுற்றுலாத்துறை சார்பாக பொங்கல் விழா நடைபெற்றது.விழாவில் 40 மலேசிய தமிழர்கள் உள்பட 150 வெளிநாட்டினர் பங்கேற்றனர். தமிழ் கலாசாரத்தை வலியுறுத்தி பல கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இந்நிகழ்ச்சியையொட்டி சோழவந்தான் காமராஜர் சிலை அருகே பல்வேறு நாட்டில் இருந்து வருகை புரிந்த வெளிநாட்டினர் கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டத்துடன் அழைத்துவரப்பட்டனர்.

இங்கு மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் பாலமுருகன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர்கள் சத்யநாராயணன், சுசீலாராணி முன்னிலை வகித்தனர். சுற்றுலாத்துறை மேலாளர் குனேஸ்வரன் வரவேற்றார். வெளிநாட்டினரை மகிழ்விக்க மதுரை கோவிந்தராஜ் கலை குழுவினரின் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஒயிலாட்டம், கட்டைக்கால் ஆட்டம், தப்பாட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, சிலம்பாட்டம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.

இதுகுறித்து சுற்றுலாத்துறை மாவட்ட அலுவலர் பாலமுருகன் கூறியதாவது:- சுற்றுலாத்துறை மூலம் மதுரை மாவட்டத்தில் பொங்கல் விழா சிறப்பாக நடந்து வருகிறது. இதேபோல் இந்த ஆண்டு சிறப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டது. மதுரை அருகே சோழவந்தான் ஜெனகை நாராயணபெருமாள் கோவிலில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் ஜெர்மன், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இத்தாலி போன்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் கலந்துகொண்டனர். குறிப்பாக மலேசியாவை சேர்ந்த 40 தமிழர்கள் உள்பட 150 வெளிநாட்டினர் கலந்து கொண்டனர். இவர்கள் கிராம மக்களுடன் சேர்ந்து பொங்கல் விழா கொண்டாடினர். இவ்வாறு அவர் கூறினார். இதை பல்வேறு வெளிநாட்டு மற்றும் உள்ளூர் மக்களும் கண்டு களித்தனர். உதவி சுற்றுலா அலுவலர் அன்பரசன் நன்றி கூறினார்.

இவ்விழாவில் கலந்துகொண்ட மலேசிய தமிழர்கள் கூறியதாவது:- உலகத்திற்கு நாகரிகத்தை கற்றுக்கொடுத்த பாரம்பரியமிக்க நம் தமிழர்களால் எத்தனையோ விழாக்கள் கொண்டாடப்பட்டாலும் பொங்கல் விழாவிற்கு ஈடாகாது. விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கும் உதவும் மாடுகளை கவுரவிக்கும் வகையில் கொண்டாடப்படும் பொங்கல் விழாவிற்கு ஈடு இணை என்றால் அது பொங்கல் விழா மட்டுமே. குறிப்பாக பொங்கல் விழாவையொட்டி மதுரை மாவட்டத்தில் நடைபெறும் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் போன்ற தமிழ்நாட்டில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீரத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. இதனால் நாங்கள் மலேசியாவில் இருந்து ஆண்டுதோறும் பொங்கல் விழாவை கொண்டாட தமிழகம் வருகிறோம். இங்கு நாங்கள் அனுபவிக்கும் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

வெளிநாட்டவர் கூறியதாவது:- இந்தியா எங்களுக்கு மிகவும் பிடித்த நாடு குறிப்பாக தமிழகம் வருவது மிகவும் பிடிக்கும். ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் மதுரைக்கு வந்து பொங்கல் விழா கொண்டாடுவோம். இதில் ஜல்லிக்கட்டு எங்களுக்கு அதிகமாக பிடிக்கும் சுற்றுலாத்துறை சார்பாக நடத்திய கிராமிய கலைஞர்களின் நிகழ்ச்சி நன்றாக இருந்தது. இந்த கலை எங்கள் நாட்டில் இல்லை. கரகாட்டப் பெண்கள் நன்றாக ஆடுகிறார்கள். மிக நன்றாக இருந்தது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்