விழுப்புரத்தில் பயங்கரம் இளம்பெண் கற்பழித்து கொலை முகத்தை சிதைத்து சென்ற மர்மநபர்களுக்கு வலைவீச்சு

விழுப்புரத்தில் இளம்பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக முகத்தை சிதைத்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2020-01-16 23:00 GMT
விழுப்புரம்,

விழுப்புரத்தில் புதுச்சேரி செல்லும் சாலையில் தெற்கு ரெயில்வே குடியிருப்பு உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் பல வீடுகள் பாழடைந்து, இடிந்து காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் பாழடைந்த ஒரு வீட்டில் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். அவரது முகம் சிதைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், இது பற்றி நகர போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று அந்த இளம்பெண்ணின் உடலை பார்வையிட்டனர். அருகில் ரத்தக்கறை படிந்த செங்கல் கிடந்தது. இறந்து கிடந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்த விவரம் தெரியவில்லை.

கற்பழித்து கொலை

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அந்த இளம்பெண்ணை மர்மநபர்கள், அழைத்து வந்து கற்பழித்துள்ளனர். மேலும் அவரது தலை மற்றும் முகத்தில் செங்கல்லால் கொடூரமாக தாக்கி, கொலை செய்துள்ளனர். அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக இளம்பெண்ணின் முகத்தை சிதைத்து விட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர் என்பது தெரியவந்தது. இந்த கொலை வழக்கில் துப்பு துலக்குவதற்காக மோப்பநாய் ராக்கி வரவழைக்கப்பட்டது. அது இளம்பெண்ணின் உடல் மற்றும் பாழடைந்த வீட்டை மோப்பமிட்டு விட்டு வடக்கு ரெயில்வே குடியிருப்பு வரை ஓடியது. மீண்டும் அந்த நாய், பாழடைந்த வீட்டிற்கு ஓடி வந்து விட்டது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. மேலும் தடயவியல் நிபுணர்களும் நேரில் வந்து, அந்த வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்தனர். இதையடுத்து இளம்பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

இந்த கொடூர கொலை சம்பவம் குறித்த புகாரின் பேரில் விழுப்புரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பாழடைந்த வீட்டிற்கு செல்லும் வழியில் உள்ள வீடுகள் மற்றும் சாலையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் மர்மநபர்களின் உருவம் ஏதும் பதிவாகி இருக்கிறதா? என்று போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்