தஞ்சையில், 2 பேர் வெட்டிக்கொலை: கைதான 4 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு

தஞ்சையில், 2 பேர் வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில் கைதான 4 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Update: 2020-01-17 22:45 GMT
தஞ்சாவூர், 

தஞ்சை வடக்குவாசல் இரட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பெஞ்சமின். இவருடைய மகன் செபஸ்டின்(வயது 30). மெக்கானிக்கான இவர், தனது நண்பரான விளார் சாலை தில்லை நகரை சேர்ந்த குமரேசன் மகன் சதீஷ்குமாருடன்(26) வடக்குவாசல் சிரேஸ்சத்திரம் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை எதிரே நின்று கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அங்கு வந்த 4 பேர், இவர்களுடன் தகராறு செய்தனர்.அப்போது ஆத்திரம் அடைந்த 4 பேரும் செபஸ்டின், சதீஷ்குமார் மற்றும் இருதரப்பினரையும் சமரசம் செய்து வைக்க முயன்ற வடக்குவாசல் காளியம்மன் கோவில் காலனி பழைய நெல்லுமண்டி தெருவை சேர்ந்த காளிதாஸ் மகன் சக்திவேல்(36) ஆகியோரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்று விட்டனர்.

இதில் படுகாயம் அடைந்த 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்களில் செபஸ்டின், சக்திவேல் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். சதீஷ்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தஞ்சை மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்தது தெரியவந்தது. இது தொடர்பாக வடக்குவாசல் ஏ.வி.பதி நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சுந்தரமூர்த்தி(21), ரமேஷ் மகன் சூர்யா(20), மேலலயன் பகுதியை சேர்ந்த பன்னீர் மகன் செல்வக்குமார்(22), வடக்குவீதி பிள்ளையார் கோவில் எதிர்சந்து பகுதியை சேர்ந்த ராமலிங்கம் மகன் வெங்கடேஸ்வரன்(22) ஆகிய 4 பேரையும் மேற்கு போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் 4 பேரும் தஞ்சை முதலாவது நீதித்துறை நடுவரின் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு நீதித்துறை நடுவர் முகமது அலி முன்பு நேற்று இரவு ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களை வருகிற 31-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதித்துறை நடுவர் உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி 4 பேரையும் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் மற்றும் போலீசார் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர்.

மேலும் செய்திகள்