அரூர் அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்ற போது வேன் கவிழ்ந்து 17 பேர் காயம்

அரூர் அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்ற போது வேன் கவிழ்ந்து 17 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2020-01-18 22:15 GMT
அரூர்,

தர்மபுரி மாவட்டம் அருர் அடுத்த தீர்த்தமலை பகுதியை சேர்ந்த 19 பேர் மாரண்டஅள்ளியில் உறவினர் இறந்த துக்க நிகழ்ச்சிக்கு ஒரு வேனில் நேற்று சென்றனர். இந்த வேனை செந்தில் என்பவர் ஓட்டி சென்றார். அரூர்-மொரப்பூர் சாலையில் முனியப்பன் கோவில் அருகே சென்ற போது முன்னால் வந்த இருசக்கர வாகனத்திற்கு வழி விட டிரைவர் வேனை திருப்பினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்து வேன் சாலையோரத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் டிரைவர் செந்தில், ரமேஷ் (வயது 66), ஆறுமுகம் (66), கந்தவேல் (50), கோமதி (37) திலகவதி (55), பூங்கொடி (46), சாமிநாதன் (60), தமிழ்செல்வன் (50) வெங்கடேசன் (63) உள்பட 17 பேர் காயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரூர் அரசு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

அவர்களுக்கு முதலுதவி அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக 13 பேர் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். துக்க நிகழ்ச்சிக்கு சென்ற போது வேன் கவிழ்ந்து 17 பேர் காயம் அடைந்ததால் தீர்த்தமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்