பூலாம்வலசில் சேவல் சண்டை நிறைவு பெற்றது விதிமீறல்களில் ஈடுபட்ட 31 பேர் மீது வழக்கு

பொங்கல் பண்டிகையையொட்டி பூலாம்வலசில் 4 நாட்கள் நடந்த சேவல் சண்டை நிறைவு பெற்றது. மேலும் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்ட 31 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-01-18 23:00 GMT
அரவக்குறிச்சி,

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள பூலாம்வலசு கிராமத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறும் சேவல் சண்டை எனும் சேவல் கட்டு நிகழ்ச்சி மிகவும் பிரபலமானதாகும். இங்கு சுமார் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக சேவல் சண்டை நடைபெற்று வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு அரவக்குறிச்சி அருகே கோவிலூர் என்ற இடத்தில் நடந்த சேவல் சண்டையில், சேவல்களின் காலில் கத்தியை கட்டி மோத விட்டதில் கத்தி குத்தி பார்வையாளர்கள் 2 பேர் உயிர் இழந்தனர். இதையடுத்து கோவிலூர் மற்றும் பூலாம்வலசு கிராமத்தில் சேவல் சண்டை நடத்த நீதிமன்றம் தடை விதித்தது. அதன்பின்னர் கடந்த ஆண்டு நிபந்தனைக்கு உட்பட்டு சேவல் சண்டை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து கடந்த ஆண்டு சேவல் சண்டை நடைபெற்றது.

நிறைவு பெற்றது

அதேபோல இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி பூலாம்வலசில் கடந்த 15-ந்தேதி சேவல் சண்டை கோலாகலமாக தொடங்கியது. கடைசி நாளான நேற்றும் சேவல் சண்டை காலையில் தொடங்கி மாலை வரை நடந்து சேவல் சண்டை நிறைவு பெற்றது. இதில் கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் பலர் தங்களது சேவல்களுடன் வந்து கலந்து கொண்டனர். 4 நாட்களில் மொத்தம் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சேவல்கள் போட்டியில் கலந்து கொண்டன.

பூலாம்வலசு கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் ஆங்காங்கே குழுகுழுவாக சேவல் சண்டை நடந்தது. போட்டியில் கலந்து கொண்ட சேவல் ஒன்றுக்கு ரூ.100 நுழைவு கட்டணம் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சேவல் சண்டை நிறைவு பெற்றதை தொடர்ந்து வெளியூர்களில் இருந்து வந்திருந்தவர்கள் புறப்பட்டு சென்றனர். இதனால் பரபரப்பாக காணப்பட்ட பூலாம்வலசு கிராம பகுதி வெறிச்சோடி கிடந்தது.

31 பேர் மீது வழக்கு

பூலாம்வலசில் கடந்த 4 நாட்களாக நடந்த போட்டியில் சேவல்களின் காலில் கத்தியை கட்டி சண்டை நடந்துள்ளது. இதில் பார்வையாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் 4 நாட்களில் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டதாக 31 பேர் மீது அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்