நகர்ப்புற பகுதியில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல்

நகர்ப்புற பகுதியில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறினார். இதுகுறித்து நெல்லையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

Update: 2020-01-18 22:45 GMT
நெல்லை, 

நாட்டில் மக்கள் பிரச்சினைகளுக்கு எந்த தீர்வு காணாமல் இருப்பதால் துன்பம், துயரங்கள் அதிகரித்து வருகிறது. இதற்கு மத்திய அரசின் தவறான கொள்கைகளே காரணம் ஆகும். நாடாளுமன்றத்தில் மக்கள் விரோத தீர்மானங்களையே நிறைவேற்றி வருகின்றனர். மக்களை திசை திருப்பும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

சென்னையில் வருகிற 21-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில நிர்வாகக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. 30-ந் தேதி காந்தி நினைவு நாளையொட்டி கருத்தரங்கு, பேரணி நடத்தப்படும்.

தி.மு.க. கூட்டணியில் பிரச்சினையை கூறிய காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியே அதற்கு தீர்வும் கண்டுள்ளார். எங்களது மதசார்பற்ற கூட்டணி தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட கூட்டணி அல்ல. 3 ஆண்டுகளாக மக்கள் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். நடுவில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று உள்ளோம். தற்போது நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் பெரும் வெற்றி பெற்றுள்ளோம்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சி தர்மம் ஒருசில இடங்களில் மீறப்பட்டு உள்ளது. அது விரைவில் நடைபெற உள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் பேசி சரி செய்யப்படும். தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி தமிழகத்துக்கு தேவையான ஒரு கூட்டணி ஆகும். இந்த அணி கண்டிப்பாக இருக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி பிரச்சினைகளை கண்டு கொள்ள வேண்டியதில்லை.

தி.மு.க. கூட்டணி உடைய வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் பகல் கனவு காண்கிறார். அவர் ஏராளான கனவுகளை கண்டு வருகிறார். அவையெல்லாம் பகல் கனவாக முடியப்போகிறது.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. ஜனநாயக படுகொலை செய்துள்ளது. விடுபட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் அனைத்து பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய நகர்ப்புற பகுதி உள்ளாட்சி தேர்தல்களையும் உடனே நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது நெல்லை மாவட்ட செயலாளர் காசி விசுவநாதன், ஏ.ஐ.டி.யு.சி. செயலாளர் சடையப்பன், துணை செயலாளர் லட்சுமணன், வங்கி ஊழியர் சங்கம் ரெங்கன், முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்