திருச்சியில் அள்ளப்படாத குப்பையில் அமர்ந்து கன்னியாஸ்திரிகள் திடீர் தர்ணா

திருச்சியில் குப்பை அள்ளப்படாததை கண்டித்து, அதன் மீது அமர்ந்து கன்னியாஸ்திரிகள் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

Update: 2020-01-19 23:00 GMT
திருச்சி,

திருச்சி பாலக்கரை அன்னைநகர் மெயின்ரோட்டில் 1-வது தெரு முதல் 6-வது தெரு வரையும், அருளானந்தபுரம் பகுதியில் 1-வது தெரு முதல் 4-வது தெரு வரையும் உள்ள வீடுகளில் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகளை மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் வீடு, வீடாக சென்று சேகரித்து செல்கிறார்கள். இதற்கிடையே அன்னைநகர் மெயின்ரோட்டின் சாலையோரம் உள்ள குப்பை தொட்டியிலும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. அந்த குப்பைகளை அவ்வப்போது வாகனங்களில் அள்ளி சென்று அப்புறப்படுத்துவது வழக்கம்.

இந்தநிலையில் பொங்கல் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பு இருந்து அங்கு சாலையோரம் கொட்டப்பட்டு இருந்த குப்பைகள் அள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அங்கு அதிகமாக குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசியதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்பட்டது.

கன்னியாஸ்திரிகள் தர்ணா

இது குறித்து அந்த பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் அங்கு கன்னியாஸ்திரிகளால் நடத்தப்படும் குழந்தைகளுக்கான பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. தேங்கி கிடக்கும் குப்பைகளால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் கூறி 2 கன்னியாஸ்திரிகள் நேற்று காலை, அங்கு குவிந்து கிடந்த குப்பை மீது அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக குப்பைகளை அள்ளுவதற்கு நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து கன்னியாஸ்திரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

மேலும் செய்திகள்