கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தவர்: காதல் திருமணம் செய்த லாரி டிரைவர் வெட்டிக்கொலை

தொட்டியம் அருகே காதல் திருமணம் செய்த லாரி டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவர் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவர் ஆவார்.

Update: 2020-01-19 22:15 GMT
தொட்டியம்,

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள திருஈங்கோய்மலை சாலியர் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகன் சுரேஷ்(வயது 25). லாரி டிரைவரான இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே ஊரை சேர்ந்த முத்துவின் மகள் சங்கீதாவை(22) காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் இருவீட்டாரும் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. சில நாட்கள் கழித்து சுரேஷ் வீட்டில் மட்டும் அவர்களை ஏற்றுக்கொண்டனர்.

இந்நிலையில் அவர்கள் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படும், சங்கீதாவின் தாத்தா அம்மையப்பன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சுரேஷ் கைதாகி ஜெயிலில் இருந்தார். இதனால் சங்கீதா, தனது தாய் லட்சுமியுடன் வசித்து வருகிறார்.

வெட்டிக்கொலை

இந்நிலையில் ஜாமீனில் வெளியே வந்த சுரேஷ், நாமக்கல் மாவட்டம் கோடங்கிப்பட்டியில் தனது தாயுடன் வசித்து வந்தார். அவர் சங்கீதாவின் வீட்டிற்கு சென்று தன்னுடன் வருமாறு, சங்கீதாவை அடிக்கடி வற்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை திருஈங்கோய்மலையில் உள்ள சங்கீதாவின் வீட்டிற்கு சென்ற சுரேஷ், சங்கீதாவின் தாய் லட்சுமியிடம் சங்கீதாவை தன்னுடன் அனுப்புமாறு கூறி, தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்தவர்கள் சுரேசை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து வீட்டை விட்டு சுரேஷ் வெளியே சென்றபோது, சங்கீதாவின் தம்பி தனுஷ்கோடி(21), உறவினர்கள் சதீஷ்வரன்(24), மஞ்சுநாதன்(28) ஆகியோர் வழிமறித்து, சுரேசை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

போலீசார் விசாரணை

இது குறித்து தகவல் அறிந்த முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், தொட்டியம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுரேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவான தனுஷ்கோடி, சதீஷ்வரன், மஞ்சுநாதன் ஆகியோரை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் திருஈங்கோய்மலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்