திருவள்ளூர் மாவட்டத்தில் 2 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து - கலெக்டர் தகவல்

திருவள்ளூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 50 ஆயிரத்து 207 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கலெக்டர் மகேஷ்வரி ரவிக்குமார் தெரிவித்தார்.

Update: 2020-01-19 22:30 GMT
திருவள்ளூர், 

திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் நேற்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் 5 வயதிற்கு உள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. முகாமை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க திருவள்ளூர் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை சார்பில் 5 வயதுக்கு உள்பட்ட 2 லட்சத்து 50 ஆயிரத்து 207 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துகள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்காக 1,268 நிலையான மையங்களிலும், மக்கள் அதிகமாக கூடும் 55 மையங்களிலும், 50 நடமாடும் மையங்கள் மூலமாகவும் மொத்தம் 1,373 முகாம்கள் வாயிலாகவும், செங்கல் சூளை போன்ற தொலைதூர இடங்களிலும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெறுகிறது.

இந்த முகாமில் சுகாதார பணியாளர்கள், சமூகநலத்துறை பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் என திருவள்ளூர் சுகாதார பகுதி மாவட்டத்தில் 4 ஆயிரத்து 955 நபர்களும், பூந்தமல்லி பகுதிகளில் 908 நபர்கள் என மொத்தம் 5 ஆயிரத்து 863 பணியாளர்களும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

போலியோ சொட்டு மருந்து பணிக்காக பிறதுறையை சேர்ந்த 30 வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. முகாமை பயன்படுத்தி அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து அளித்து குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் முகாம் சிறப்பாக நடைபெறுவதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் தயாளன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் கே.ஆர்.ஜவகர்லால், திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சந்தானம், திருவள்ளூர் தாசில்தார் பாண்டியராஜன், மருத்துவர்கள் சைதன்யா, தீபா, சுகாதார அலுவலர் செல்வராஜ், சுகாதார ஆய்வாளர்கள் ரமேஷ், வெயில் முத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்