போலியோ சொட்டு மருந்து முகாம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்

விருதுநகரில் கலெக்டர் கண்ணன் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை தொடங்கி வைத்தார்.

Update: 2020-01-19 22:30 GMT
விருதுநகர், 

விருதுநகர் நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமில், கலெக்டர் கண்ணன், குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது:-

விருதுநகர் மாவட்டத்தில், பிறந்த குழந்தைகள் முதல் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ நோய் பாதிப்பு இல்லாத நிலை உருவாக வேண்டும் என்ற நோக்கத்தில் ஆண்டு தோறும் 2 கட்டங்களாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் முதல்கட்டமாக போலியோ சொட்டு மருந்து மாவட்டத்தில் உள்ள 1,168 மையங்களில் வழங்கப்பட்டது.

இந்த மையங்கள் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிகள், சாவடிகள், கோவில்கள் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டன.

மேலும் 46 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு ரெயில் நிலையம், பஸ் நிலையங்கள் மற்றும் திருமண விழாக்களில் உள்ள குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. முகாமில், சுகாதார பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் என 4,580 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் இணை இயக்குனர் துரைராஜ், துணை இயக்குனர்கள் பழனிச்சாமி, ராம்கணேஷ் உள்பட செவிலியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போது காந்திபுரம் தெருவை சேர்ந்த பெண்கள் முகாமுக்கு வந்து, தங்கள் பகுதியில் சுகாதார சீர்கேடு உள்ள தாகவும் அதனை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து கலெக்டர் கண்ணன் அப்பகுதிக்கு சென்று நேரடியாக ஆய்வு செய்தார். உடனடியாக விருதுநகர் நகராட்சி ஆணையரை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதோடு, அப்பகுதி மக்களும் தாங்கள் இருக்கும் இடத்தையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும் செய்திகள்