அரசு கலைக்கல்லூரிகளில் காலிப்பணியிடங்களுக்கு விரைவில் தேர்வு நடத்தப்படும் - அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி

தமிழகத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரிகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப விரைவில் தேர்வு நடத்தப்படும் என்று வேலூரில் அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

Update: 2020-01-19 22:45 GMT
வேலூர்,

வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகம் மற்றும் தேசிய வடிவமைப்பு ஆராய்ச்சி மையம் சார்பில் மாணவர்கள் பலூன் மூலம் செயற்கைகோள் செலுத்தும் நிகழ்ச்சி பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், சிறப்பு அழைப்பாளராக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

உலகிலேயே இந்தியா தான் முதல் முயற்சியில் செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்பி வெற்றி கண்டது. ஆசிய நாடுகளில் செவ்வாய் கிரகத்துக்கு செயற்கோள் அனுப்பிய நாடு என்ற பெருமையையும் பெற்றது. மாணவர்கள் விண்வெளி ஆய்வில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள். கடந்த 2012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த போட்டியில் அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் ஆளில்லா சிறிய விமானத்தை வானில் செலுத்தி சாதனை படைத்தனர். இதனை நாசா விஞ்ஞானிகளே பாராட்டினர்.

இந்தியாவில் 2-வது விண்கள தளம் தமிழகத்தில் அமைக்கப்பட உள்ள நிலையில் இதுபோன்ற ஆய்வுகள் வரவேற்கத்தக்கது. பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,058 பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டது. அதில், பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதால் முடிவுகள் அறிவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் கலைக்கல்லூரிகளில் 2,331 காலி பணியிடங்களுக்கான தேர்வு விரைவில் நடத்தப்படும். மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை பல்கலைக்கழகங்களே நிரப்பி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு அண்ணா பல்கலைக்கழகத்தை சீர்மிகு பல்கலைக்கழகமாக அறிவித்து 5 ஆண்டுகளுக்கு ஆயிரம் கோடியை ஒதுக்கி உள்ளது. ஆனால் சீர்மிகு பல்கலைக்கழகமாக மாற்ற ரூ.2,570 கோடி தேவைப்படுகிறது. இதுதொடர்பாக 5 பேர்் கொண்ட குழுவை அமைத்து ஆய்வு செய்து வருகிறோம். அதன் 2-வது கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது.

சீர்மிகு பல்கலைக்கழமாக மாறினால் 10 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் நியமனம் செய்யப்பட வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் கட்டமைப்புக்கான செலவை மாணவர்களிடம் இருந்து கட்டணமாக வசூலிக்கும் சூழ்நிலை ஏற்படும். எனவே இதுதொடர்பாக தீவிரமாக ஆய்வு செய்யப்படும். பொறியியல் கல்லூரிகளுக்கு நீட் தேர்வு நடைபெறாது.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

மேலும் செய்திகள்