ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டதன் மூலம் ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடி வருவாய்

ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டதன் மூலம் ஆதி கேசவ பெருமாள் கோவிலுக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடி வருவாய் கிடைக்கும் என்று தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் கூறினார்.

Update: 2020-01-20 23:00 GMT
நாகர்கோவில்,

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ஆனையடி பண்ணை ரப்பர் தோட்டத்தில் ரப்பர் பால் உற்பத்தி தொடக்க விழா நடந்தது. இதற்கு இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் குழு தலைவர் சிவ.குற்றாலம் தலைமை தாங்கினார். மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ஏ. அசோகன், அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, மாவட்ட கூட்டுறவு அச்சகத்தலைவர் ஜெயசுதர்சன், அறங்காவலர் குழு உறுப்பினர் பாக்கியலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் கலந்து கொண்டு ரப்பர் பால் உற்பத்தியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 83.5 ஏக்கர் நிலம் தனியார் சிலரது ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது. இதனால் கோவிலுக்கு வருமானம் இல்லாமல் இருந்து வந்தது.

2011-ம் ஆண்டு அந்த நிலம் மீட்கப்பட்டு, வைகுண்டா நிறுவனத்தால் 48 ஏக்கர் பரப்பளவில் முதல் கட்டமாக ரப்பர் மரங்கள் நட்டு வளர்க்கப்பட்டு, இன்று (நேற்று) முதல் வைகுண்டா நிறுவனத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் ரப்பர் பால் பண்ணை வழங்கப்பட்டு உள்ளது.

ரூ.1 கோடி வருவாய்

மேலும் அந்த பண்ணையில் மற்ற இடங்களிலும் ரப்பர் மரம் நடப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த ரப்பர் மரங்கள் மூலம் 2021-ம் ஆண்டு முதல் முழு அளவில் ரப்பர் பால் உற்பத்தி செய்யப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடி வருவாய் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்து சமய அறநிலையத்துறை உதவி என்ஜினீயர் ராஜ்குமார் திட்டம் குறித்து விளக்கினார். இதில் வைகுண்டா நிறுவன இயக்குனர் மீனா ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்