வேலூர் அருகே, சைக்கிள்மீது மோட்டார்சைக்கிள் மோதல்: ராணுவவீரர் உள்பட 2 பேர் பலி

வேலூர் அருகே சைக்கிள்மீது மோட்டார்சைக்கிள் மோதியதில் ராணுவ வீரர் உள்பட 2 பேர் பலியானார்கள்.

Update: 2020-01-20 22:30 GMT
வேலூர், 

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள அகரத்தை சேர்ந்தவர் அசோக்குமார். இவருடைய மகன் ராஜ்குமார் (வயது 28). ராணுவ வீரர். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில் அவர் நேற்று காலை மோட்டார்சைக்கிளில் வேலூருக்கு வந்திருந்தார். பின்னர் அவர் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

அவருடன் உறவினரான செங்காநத்தத்தை சேர்ந்த நவீன் குமார் என்பவரும் சென்றார். ராணுவவீரர் ராஜ்குமார் மோட்டார்சைக்கிளை ஓட்ட நவீன்குமார் பின்னால் அமர்ந்திருந்தார். அப்துல்லாபுரத்தை அடுத்த இலவம்பாடி கிராமத்தை கடந்து அங்குள்ள வளைவில் திரும்பியபோது எதிரே புலிமேடு கிராமத்தை சேர்ந்த விவசாயி வில்வநாதன் (54) என்பவர் சைக்கிளில் வந்தார்.

வளைவில் திரும்பியபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்சைக்கிள், எதிரே சைக்கிளில் வந்த வில்வநாதன் மீது மோதியது. அதன்பின்னரும் நிற்காத மோட்டார்சைக்கிள் சாலையோரத்தில் உள்ள புளியமரத்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ராணுவ வீரர் ராஜ்குமார் மற்றும் வில்வநாதன் ஆகிய இருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள். நவீன்குமார் படுகாயமடைந்தார்.

இதனைப் பார்த்த பொதுமக்கள் நவீன் குமாரை மீட்டு அவருக்கு முதலுதவி அளித்தனர். அங்கு சென்ற விரிஞ்சிபுரம் போலீசார் நவீன்குமாரை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பலியான ராஜ்குமார், வில்வநாதன் ஆகியோரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவர்கள் அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பலியான வில்வநாதனின் மகளுக்கு இன்னும் 3 நாட்களில் திருமணம் நடக்க இருந்தது. இந்த நிலையில் அவர் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்