அர்ஜூனாபுரம் கிராமத்தில் பட்டப்பகலில் துணிகரம்: முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் ரூ.4 லட்சம் நகைகள் திருட்டு - போலீசார் விசாரணை

கண்ணமங்கலம் அருகே அர்ஜூனாபுரம் கிராமத்தில் முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் புகுந்த மர்மநபர்கள் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடிச்சென்றுள்ளனர்.

Update: 2020-01-20 22:45 GMT
கண்ணமங்கலம்,

கண்ணமங்கலம் அருகே படவேடு செல்லும் சாலையில் உள்ள அர்ஜூனாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சடையன் (வயது 65). முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி பச்சியம்மாள், மகள்கள் காயத்ரி (20) பவித்ரா, மகன் குணா. இவர்களில் காயத்ரிக்கு திருமணமாகி விட்டது. அவர் கர்ப்பிணியாக உள்ளதால் தாயார் வீட்டிற்கு வந்திருந்தார். இந்த நிலையில் சடையனும், அவரது குடும்பத்தாரும் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு நிலத்திற்கு சென்றிருந்தனர். பவித்ரா பள்ளிக்கு சென்றுவிட்டார்.

காலை 11 மணியளவில் சடையனின் மகன் குணா வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவுகள் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து பெற்றோருக்கு தகவல் அளித்தார். அவர்கள் வந்து பார்த்தபோது இரும்பு பெட்டிக்குள் இருந்த 15 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. மேலும் அந்த நபர்கள் நகைகள் இருந்த டப்பாக்களை வீட்டருகே போட்டுச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக சடையன் கண்ணமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததின்பேரில் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி மற்றும் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். திருடப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.4 லட்சம் வரை இருக்கலாம் என தெரிகிறது. இதேபகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருட்டு நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டப்பகலில் நடந்த கொள்ளை அர்ஜூனாபுரம் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இதேபகுதியில் ஜெயா என்பவர் வீட்டிலும் கொள்ளையர்கள் புகுந்து ஒரு பவுன் நகைகளை திருடிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் நடந்த நேரத்தில் அப்பகுதியில் 2 குடுகுடுப்பைகாரர்கள் உலவியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்ததின் பேரில் போலீசார் கண்காணித்து காளசமுத்திரம் கிராமத்தில் நடமாடிய 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்