நெல்லை அருகே, போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட குழந்தை திடீர் சாவு - அரசு ஆஸ்பத்திரியை உறவினர்கள் முற்றுகை

நெல்லை அருகே போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட குழந்தை திடீரென்று இறந்தது. இதையடுத்து உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-01-20 23:00 GMT
நெல்லை, 

நெல்லை அருகே உள்ள தருவை கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவருடைய 1½ வயது மகள் கயல்விழி. இவளுக்கு சளி தொல்லை இருந்துள்ளது. நேற்று முன்தினம் நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. இதையொட்டி கயல்விழிக்கும் அந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த முகாமில் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் கயல்விழிக்கு சளி தொல்லை அதிகரித்தது. பின்னர் மூச்சு திணறலும், வயிற்றுபோக்கும் ஏற்பட்டது.

இதனால் குழந்தை கயல்விழியை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் கயல்விழி இரவு பரிதாபமாக இறந்தாள். இதுபற்றி அறிந்த கயல்விழியின் உறவினர்கள் நேற்று ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், போலியோ சொட்டு மருந்து கொடுத்ததால்தான் குழந்தை இறந்து விட்டதாக குற்றம் சாட்டினர். மேலும், குழந்தையின் சாவுக்கு உரிய காரணத்தை கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும், இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட குழந்தை திடீரென இறந்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்