கொடுக்கல் வாங்கல் தகராறில் மாமனார் கொலையில் நெசவு தொழிலாளி கைது

அரக்கோணம் அருகே பணத்தகராறில் மாமனாரை கொலை செய்ததாக நெசவு தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-01-22 22:45 GMT
அரக்கோணம்,

அரக்கோணம் அருகே உள்ள வேடல் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 37). நெசவுத்தொழிலாளி. இவரது மனைவி அலமேலு உறவினர்களிடம் சீட்டு பணம் கட்டியிருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த ஏலத்தில் சீட்டுப்பணத்தை தள்ளுபடி போக எடுத்துள்ளார்.

சம்பவத்தன்று செலவுக்கு பணம் தருமாறு மனைவியிடம் செல்வராஜ் கேட்டுள்ளார். அதற்கு குடும்ப செலவுக்கு தேவைப்படுகிறது என கூறி அலமேலு பணத்தை தர மறுத்தார். இதனால் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது அலமேலுவுக்கு ஆதரவாக பக்கத்து வீட்டில் வசித்த அவரது தந்தை ஜெயராமன் (60), தம்பி வெங்கடேசன் (32) ஆகியோர் பேசவே வாக்குவாதம் ஏற்பட்டது. செல்வராஜூக்கு ஆதரவாக அவரது தம்பி ஆறுமுகம் செயல்பட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில் செல்வராஜை மாமனார் ஜெயராமனும் மைத்துனர் வெங்கடேசனும் கைகளால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த செல்வராஜ் அருகிலிருந்த இரும்புக் கம்பியை எடுத்து மாமனார் ஜெயராமனின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் அவர் ரத்தவெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். பின்னர் அவர் சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டார். இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் ஜெயராமன் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதனையடுத்து மாமனாரை கொலை செய்ததாக செல்வராஜையும் அதற்கு உடந்தையாக இருந்ததாக அவரது தம்பி ஆறுமுகத்தையும் அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, சப்–இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்