கூட்டணி தர்மத்துக்காக அமைதியாக இருக்கிறேன்: அமைச்சர் ஜெயக்குமாரின் நற்சான்று எனக்கு தேவை இல்லை பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

அமைச்சர் ஜெயக்குமாரின் நற்சான்று எனக்கு தேவை இல்லை, கூட்டணி தர்மத்துக்காக அமைதியாக இருப்பதாக முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Update: 2020-01-23 23:15 GMT
நாகர்கோவில்,

தமிழக அமைச்சர் ஜெயக்குமார் சில விஷயங்களை பேசி இருக்கிறார். அமைச்சர் ஜெயக்குமாரின் நற்சான்று எனக்கு தேவை இல்லை. என் செயல்பாடுகள் குறித்து ஜெயலலிதா 2 முறை பேசி இருக்கிறார். கூட்டணி தர்மத்துக்காக நான் அமைதியாக இருக்கிறேன்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீதும் நல்ல மரியாதை வைத்திருக்கிறேன். தமிழகத்தில் அடுத்த சட்டசபை தேர்தல் கூட்டணி பற்றி அகில இந்திய தலைவர்கள் முடிவு எடுப்பார்கள்.

பா.ஜனதா தலைவர்

தமிழக பா.ஜனதா தலைவராக ரஜினி வருவாரா? என்று அவரிடம்தான் கேட்க வேண்டும். தற்போது நடக்கும் பிரச்சினைக்கு ரஜினி எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்? ரஜினி 2 பத்திரிகைகளை குறிப்பிட்டு சொன்னார். ஒரு பத்திரிகையை தி.மு.க.வினர் வைத்திருப்பார்கள் என்றார். ஆனால் அதை படிப்பவர்கள் முட்டாள்கள் என்று கூறவில்லை. துக்ளக் வைத்திருப்பவர்கள் அறிவு ஜீவிகள் என்றார்.

50 ஆண்டுகளுக்கு முன் நடந்த விஷயத்தை தற்போது பேசுகிறார்கள். ஏன் என்றால் ரஜினியை மையப்படுத்தினால்தான் தங்களது பிழைப்பு நடக்கும் என்று அனைத்து கட்சியினரும் செயல்படுகின்றனர். காங்கிரசார் சத்தியமூர்த்தி பவனை கொண்டுபோய் அண்ணா அறிவாலயத்திற்குள் வைக்கும் நிலை ஏற்பட்டு விட்டது.

துணிச்சல் இல்லை

குமரி மாவட்ட போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டு கொல்லப்பட்டு உள்ளார். இதுபற்றி கேட்க குமரி மாவட்டத்தில் உள்ள எம்.பி.க்கும், 6 எம்.எல்.ஏ.க்களுக்கும் துணிச்சல் இல்லை. இதுதொடர்பாக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையிலும் கேள்வி எழுப்பவில்லை. ஏன் எனில் அடுத்த இலக்கு நாமாகி விடுவோமோ என்று அவர்கள் அச்சப்படுகிறார்கள்.

இலங்கையில் குண்டு வெடித்ததற்கு நாங்கள் கண்டனம் தெரிவித்தோம். ஆனால் நம் மாவட்டத்தில் குண்டு வெடித்தால் கூட இவர்கள் கண்டனம் தெரிவிக்க மாட்டார்கள். தற்போது கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் அனைவருமே தமிழகத்தை சேர்ந்தவர்கள் தான். பயங்கரவாதிகள் பற்றி ஏற்கனவே நான் தெரிவித்தேன்.

அகில இந்திய பா.ஜனதா தலைவராக நட்டா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு தமிழக மற்றும் குமரி மாவட்ட பா.ஜனதா சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக பா.ஜனதா தலைவர் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார். அதற்கான கருத்துகேட்பு நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆலோசனை கூட்டம்

முன்னதாக குமரி மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்று பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட தலைவர் தர்மராஜ் மற்றும் நிர்வாகிகள் தேவ், மீனாதேவ், ராஜன், உமாரதி, அஜித் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆறுதல்

களியக்காவிளை சோதனை சாவடியில் பயங்கரவாதிகளால் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அவரது வீட்டுக்கு முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்றார். அவர், வில்சன் உருவ படத்துக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் வில்சன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

மேலும் செய்திகள்