நாகர்கோவிலில் தங்கும் விடுதியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை அழுகிய நிலையில் உடல் மீட்பு

நாகர்கோவிலில் தங்கும் விடுதியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.

Update: 2020-01-23 22:15 GMT
நாகர்கோவில்,

வேர்கிளம்பி செட்டிசார்விளையை சேர்ந்தவர் சதீஷ் (வயது 39), கட்டிட தொழிலாளி. இவர் நாகர்கோவில் ராமன்புதூரில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கி இருந்து கட்டிட வேலைகளுக்கு சென்று வந்தார். இந்த நிலையில் சதீஷ் கடந்த 2 நாட்களாக வேலைக்கு செல்லவில்லை. எனவே சக தொழிலாளர்கள் அவரை தேடி விடுதிக்கு வந்து அவர் தங்கியிருந்த அறை கதவை தட்டினர். ஆனால், கதவு திறக்கப்படவில்லை. உள்பக்கமாக பூட்டி இருந்தது. மேலும் அறையில் இருந்து லேசாக துர்நாற்றம் வீசியது.

இதனால் சந்தேகம் அடைந்த தொழிலாளர்கள் விடுதி ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் இதுதொடர்பாக நேசமணிநகர் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தற்கொலை

அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அறையில் சதீஷ் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். அவரது உடல் அழுகி இருந்தது. இதைத் தொடர்ந்து பிணத்தை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.

இதுபற்றி போலீசாரிடம் கேட்டபோது, “பிணமாக தொங்கிய சதீசுக்கு திருமணம் ஆகாமல் இருந்தது. இதனால் அவர் மனவேதனையில் காணப்பட்டு உள்ளார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருக்கிறார்“ என்றனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்