“ரஜினியை மிரட்டுகின்றனர்” அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பரபரப்பு பேட்டி

ரஜினியை மிரட்டுகின்றனர் என அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

Update: 2020-01-23 23:00 GMT
விருதுநகர்,

விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிய அலுவலக கட்டிடங்களுக்கு பூமிபூஜை நடந்தது. விழாவில் அடிக்கல் நாட்டிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

1971-ம் ஆண்டு தி.க. பேரணியில் நடந்ததைத்தான் ரஜினிகாந்த் பேசியுள்ளார். ரஜினிகாந்தை மிரட்டுகின்றனர். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை மட்டும் இழிவுபடுத்தும் செயலை தி.க.வினர், தி.மு.க.வினர் தொடர்ந்து செய்து வருகிறார்கள். ரஜினிகாந்த் ரசிகர்கள் பொறுமை காக்கின்றனர். ஆன்மிகவாதிகளை பழிதீர்க்கும் செயலை செய்து கொண்டு இருக்கின்றனர்.

உருவபொம்மையை எரிப்போம், வீட்டை முற்றுகையிடுவோம் என மிரட்டுகின்றனர். ரஜினிகாந்த் நியாயவாதி. நல்ல மனிதர், மனதில் பட்டதை பேசுகிறார். நடந்ததை அப்படியே பேசி உள்ளார். ராமபிரான் படத்தை தி.க. பேரணியில் நிர்வாணமாக கொண்டு வந்தது உண்மையா-இல்லையா?

வேற்று மதத்தை சேர்ந்த கடவுளை இம்மாதிரியாக செய்து இருந்தால் சும்மா விடுவார்களா? இந்து மதத்தை இழிவுபடுத்துபவர்கள் தேர்தலில் அதன் விளைவுகளை அனுபவிப்பார்கள். ரஜினிகாந்த் பேசியதை மக்கள் ஏற்றுக் கொண்டுவிட்டனர்.

தந்தை பெரியார் இல்லை என்றால் என்னை போன்றவர்கள் அமைச்சராகி இருக்க முடியாது. அவர் கூறிய பகுத்தறிவு கருத்துகளையும், மூடநம்பிக்கைக்கு எதிரான கருத்துகளையும் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் ஆன்மிகத்தை பொறுத்தவரை ரஜினிகாந்த் கூறியதில் தவறு ஏதும் இல்லை.

தமிழகத்தில் அனைத்து அமைச்சர்களும் முதல்-அமைச்சர்கள்தான் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசி உள்ளது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது. முதல்-அமைச்சர் பதவியை ஓ.பன்னீர்செல்வத்துக்கு விட்டு தருவாரா? என துரைமுருகன் கூறி உள்ளது பிரச்சினையை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

முயல்வேகத்தில் சென்று கொண்டிருந்த நாங்கள் இடையில் வேகத்தை குறைத்துவிட்டோம். இனி வரும் எல்லா தேர்தல்களிலும் அ.தி.மு.க.வுக்கு வெற்றிதான். 2021-ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல்தான் கிளைமாக்ஸ்.

2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் நலன் கருதி தமிழக அரசு பால்விலையை உயர்த்தி அறிவித்தது. தற்போது தனியார் பால் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தி உள்ளன. பால் விலை உயர்வால் மக்களுக்கு பிரச்சினை ஏதும் ஏற்படாதவகையில் அரசு நடவடிக்கை எடுக்கும். விருதுநகரில் ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மருத்துவ கல்லூரிக்கான பணிகள் நடந்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் கண்மாய்நீரை பருகிய கிராம மக்களுக்கு தாமிரபரணி தண்ணீர் கொடுத்துள்ளோம். அனைத்து ஒன்றிய பகுதிகளிலும் தாமிரபரணி குடிநீர் வினியோகம் செய்யப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அப்போது எம்.எல்.ஏ.க்கள் ராஜவர்மன், சந்திரபிரபா, அறநிலையத்துறை அறங்காவலர்குழு மாவட்ட தலைவர் பலராமன் ஆகியோர் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்