‘விமர்சனங்களை உரமாக்கி கொள்கை பயிர்களை வளர்ப்பவர்கள் நாங்கள்’ - கி.வீரமணி பேச்சு

பெரியார் குறித்த விமர்சனங்கள் அனைத்தையும் உரமாக்கி அதன் மூலம் எங்களது கொள்கைகளை வளர்ப்போம் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறினார்.

Update: 2020-01-23 22:30 GMT
காரைக்குடி, 

காரைக்குடி ஐந்து விளக்கு அருகே உள்ள பாவலர் மணி பழனி திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் அரங்கசாமி தலைமை தாங்கினார். மண்டல தலைவர் சாமி திராவிடமணி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் வைகறை வரவேற்றார். கழகத் தலைவர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

நீட் தேர்வு மோசடி, மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை போன்ற சூழ்ச்சி வலை பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே பிரசார பயணத்தை மேற்கொண்டு வருகிறோம். இன்றைய நிலையில் நாடு பொருளாதார சீரழிவை சந்தித்துக் கொண்டிருக்கிறது. குடியுரிமை என்ற பெயரில் சிறுபான்மை மக்கள் வஞ்சிக்கப்படுகின்றனர். மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை நமது கல்விக் கண்ணை குருடாக்கும் செயலாகும்.

விமர்சனத்தால் பெரியாரின் அரிய செயல்களை களங்கப்படுத்தி விடலாம் என சிலர் நினைக்கின்றனர். ஆனால் விமர்சனங்களையே உரமாக்கி அதன் மூலம் கொள்கை பயிர்களை வளர்ப்பவர்கள் நாங்கள். தமிழக மக்கள் மத்தியில் சமத்துவத்தை உருவாக்க போராடி வெற்றி பெற்றவர் பெரியார்.

ஒரே நாடு, ஒரே மொழி. ஒரே மதம், ஒரே ரேஷன் கார்டு, ஒரே தேர்வு முறை என்று பேசுபவர்கள் ஒரே சாதி என்ற நிலைக்கு வருவார்களா. கரையான் புற்றுக்குள் கருநாகம் புகுந்தது போல், தமிழக கல்வி நிறுவனங்களில் மத்திய அரசு புகுந்துகொண்டு தமிழர்களின் கல்வி உரிமைகளை பாழ் படுத்துகிறது.

சமூக நீதி, இட ஒதுக்கீடு என்பது நாம் கேட்கும் சலுகையல்ல. அவை நாம் போராடி பெற்ற உரிமையாகும். 1901-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் படித்தவர்களின் எண்ணிக்கை ஒரு சதவீதம் மட்டுமே. அன்றிலிருந்து இன்றுவரை ஆரியதிராவிட போராட்டங்கள் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை என்பது குலக்கல்வி முறையின் மறு வடிவமே. இது கல்வியை அனைவருக்கும் கொடுக்காதே என்பதாகும். இதிலிருந்து விடுபட நாம் போராட தயாராக வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்