தமிழகத்தில் ஈரோடு, கோவை, நாமக்கல் மாவட்டங்களில்தான் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகம் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

தமிழகத்தில் ஈரோடு, கோவை, நாமக்கல் மாவட்டங்களில்தான் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

Update: 2020-01-24 23:00 GMT
கடத்தூர், 

சாலை பாதுகாப்பு வாரவிழாைவயொட்டி போக்குவரத்து துறை சார்பில் கோபி கலை அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் தியாகராசு வரவேற்று பேசினார். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு கருத்தரங்கத்தை தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து நிருபர்களுக்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பொதுமக்களுக்காக தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இந்தியாவிலேயே விபத்துகள் குறைவான மாநிலம் என தமிழகம் தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான விருதை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மத்திய அரசிடம் இருந்து பெற்று உள்ளார்.

தமிழகத்தில் ஈரோடு, கோவை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில்தான் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. விபத்துகள் ஏற்படாத வண்ணம் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் தான் சாலைப்பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் தமிழகத்தில் கடந்த ஆண்டை விட ‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 16 சதவீதம் குறைந்து உள்ளதே? என்ற கேள்விக்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பதில் அளிக்கையில், ‘இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சரிடம் தான் கேட்க வேண்டும். ‘நீட்’ தேர்வை பொறுத்தவரை தமிழகம் நீட்டாகத்தான் போய் கொண்டிருக்கிறது,’ என்றார்.

முன்னதாக நடந்த கருத்தரங்கில் கல்லூரி தலைவர் கருப்பணன், செயலாளர் தரணீதரன், டீன் செல்லப்பன், மாவட்ட முன்சீப் எஸ்.கணேசன், கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், ஈரோடு துணை போக்குவரத்து ஆணையர் நெல்லையப்பன், கோபி வட்டார போக்குவரத்து அதிகாரி பழனிவேலு, மாநில வர்த்தக அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்