பீமா- கோரேகாவ் வன்முறை வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றம்: உண்மையை மூடி மறைக்க மத்திய அரசு முயற்சி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் குற்றச்சாட்டு

பீமா- கோரேகாவ் வன்முறை வழக்கை மத்திய அரசு என்.ஐ.ஏ. விசாரணைக்கு மாற்றி இருப்பது, உண்மையை மூடி மறைக்கும் முயற்சி என்று காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் குற்றம்சாட்டின.

Update: 2020-01-25 23:30 GMT
மும்பை,

புனே மாவட்டம் பீமா- கோரேகாவ் பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி நடந்த போர் நினைவுதினத்தில் சாதி மோதல் வன்முறை வெடித்தது. இந்த கலவரத்துக்கு முந்தைய நாள் நடைபெற்ற எல்கர் பரிஷத் மாநாட்டில் இடதுசாரி தலைவர்கள் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதே காரணம் என புனே போலீசார் கூறினர்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக சுதிர் தவாலே, ரோனா வில்சன், சுரேந்திர காட்லிங், மகேஷ் ராவுத் மற்றும் தெலுங்கு கவிஞர் வரவரராவ் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் பிரதமர் மோடியை கொலை செய்ய திட்டம் தீட்டியதற்கான ஆதாரம் கிடைத்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. பாரதீய ஜனதா- சிவசேனா கூட்டணி அரசில் மேற்கண்டவர்கள் மீது இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மராட்டியத்தில் அரசியல் மாற்றத்தை தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனா தலைமையில் ஆட்சி அமைந்த நிலையில், பீமா- கோரேகாவ் வழக்கை ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு விசாரணை குழுவுக்கு மாற்ற வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேக்கு கடிதம் எழுதினார்.

இது தொடர்பாக கடந்த வியாழக்கிழமை துணை முதல்-மந்திரி அஜித்பவார், உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் ஆகியோர் வழக்கின் நிலை குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

ஆனால் மறுநாளே, அதாவது நேற்று முன்தினம் அதிரடி நடவடிக்கையாக இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரணைக்கு மத்திய அரசு மாற்றிக்கொண்டது. மராட்டிய அரசின் ஒப்புதல் இல்லாமலேயே அமித்ஷாவின் உள்துறை அமைச்சகம் எடுத்த இந்த நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வழக்கில் இடதுசாரி சிந்தனையாளர்கள் தவறாக கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், வன்முறையில் வலதுசாரி அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதாகவும் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வந்த நிலையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளது.

இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பீமா- கோரேகாவ் வன்முறை வழக்கை மராட்டிய அரசு விசாரணை நடத்தினால் உண்மை வெளிச்சத்திற்கு வந்துவிடும் என்று மத்திய அரசு அஞ்சுவதாக நான் கருதுகிறேன். இதனால் தான் வழக்கு அவசர அவசரமாக தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது. அநீதிக்கு எதிராக பேசுவது ஒன்றும் நக்சலிசம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், மந்திரியுமான நவாப் மாலிக், முந்தைய பாரதீய ஜனதா அரசின் தவறான நடவடிக்கைகளை மூடி மறைக்க மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சச்சின் சாவந்த் கூறுகையில், “மராட்டிய கூட்டணி அரசு பீமா-கோரேகாவ் வழக்கில் மறு விசாரணையை தொடங்கிய உடன், இதில் மத்திய அரசு தலையிட்டு வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றியுள்ளது. இது பாரதீய ஜனதாவின் சதித்திட்டத்தை தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளது. இந்த வழக்கு தங்களது வரம்பிற்கு உட்பட்டது என கண்டறிய தேசிய புலனாய்வு முகமைக்கு 2 ஆண்டுகள் தேவைப்பட்டதா? இதை நான் கடுமையாக கண்டிக்கிறேன்” என்றார்.

மேலும் செய்திகள்