நாங்குநேரியில் பரபரப்பு: சுங்கச்சாவடியில் ஊழியர்கள்- பயணிகள் மோதல்; 2 பேர் காயம் - போலீசார் விசாரணை

நாங்குநேரி சுங்கச்சாவடியில் ஊழியர்களுக்கும், பயணிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2020-01-26 23:00 GMT
நாங்குநேரி, 

குமரி மாவட்டம் மணவாளகுறிச்சியை சேர்ந்தவர் முகம்மது ஹனிபா மகன் ஷேக் சுலைமான் (வயது 44). அவருடைய உறவினர் சர்புதீன் (47). இவர்கள் இருவரும் தங்களது குடும்பத்தினருடன் தூத்துக்குடியில் நடைபெறும் உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்துகொள்வதற்காக தனித்தனி கார்களில் வந்து கொண்டிருந்தனர்.

காலை 8 மணிக்கு நெல்லை மாவட்டம் நாங்குநேரி சுங்கச்சாவடிக்கு வந்தனர். தற்போது சுங்கச்சாவடியில் பாஸ்டேக் முறை அமல்படுத்தப்பட்டுள்ளதால் முதல் கவுன்ட்டர் மட்டும் பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்காக செயல்பட்டு வருகிறது. இதனால் முதல் கவுன்ட்டரில் ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

இந்த நிலையில் அங்கு பணியாற்றிய ஊழியர்கள், காலை ஷிப்டு பணிக்கு வந்த ஊழியர்களிடம் கணக்குகளை ஒப்படைத்து கொண்டிருந்தனர். இதனால் 1-வது கவுன்ட்டரை திறப்பதில் காலதாமதம் ஆனது. இதையடுத்து ஷேக் சுலைமான், சர்புதீன் ஆகிய இருவரும் தங்களது கார்களில் இருந்து இறங்கி வந்து, அங்கிருந்த சுங்கச்சாவடி ஊழியர்களிடம் கேட்டனர். இதில் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் தகராறு முற்றியதில் சுங்கச்சாவடி ஊழியர்களான நாங்குநேரி மறுகால்குறிச்சியை சேர்ந்த செல்வம் (24), ஆலடிபுதூரை சேர்ந்த பிச்சைக்கண்ணு (20) மற்றும் ஒருவர் உள்பட 3 பேர் சேர்ந்து அங்கிருந்த பிளாஸ்டிக் இருக்கைகளை ஷேக் சுலைமான், சர்புதீன் ஆகியோர் மீது வீசி எறிந்ததாக கூறப்படுகிறது.

இதில் அவர்கள் இருவரும் காயம் அடைந்தனர். இதையடுத்து நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். பின்னர் இதுகுறித்து நாங்குநேரி போலீசில் ஷேக் சுலைமான் புகார் செய்தார். அதன்பேரில் சுங்கச்சாவடி ஊழியர்கள் செல்வம், பிச்சைக்கண்ணு ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சுங்கச்சாவடி ஊழியர்கள் அளித்த புகாரின்பேரிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்