தார்வார் அருகே கார்கள் மோதி விபத்து: மடாதிபதி உள்பட 4 பேர் உடல் நசுங்கி சாவு

தார்வார் அருகே 2 கார்கள் நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளானதில் மடாதிபதி உள்பட 4 பேர் உடல் நசுங்கி பலியானார்கள்.

Update: 2020-01-26 22:45 GMT
தார்வார்,

தார்வார் மாவட்டம் குந்துகோலில் சிவானந்த் மடம் அமைந்துள்ளது. இந்த மடத்தின் மடாதிபதியாக பசவேஸ்வர சுவாமி இருந்து வந்தார். இவர் நேற்று தனது ஆதரவாளர்களான சோமண்ணா தேசாய், பசப்பா பூஜாரி, சித்தப்பா இங்கலள்ளி உள்பட 5 பேருடன் காரில் தார்வார் அருகே யரிகொப்பா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். காரை டிரைவர் ஓட்டினார்.

அப்போது எதிரே வந்த ஒரு கார் எதிர்பாராத விதமாக மடாதிபதி சென்ற கார் மீது நேருக்கு நேராக மோதியது. இதில் 2 கார்களும் முன்பகுதியும் பலத்த சேதம் அடைந்தன.

இந்த விபத்தில் மடாதிபதி பசவேஸ்வர சுவாமி, அவருடைய கார் டிரைவர் உள்பட 4 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் சோமண்ணா தேசாய், பசப்பா பூஜாரி, சித்தப்பா இங்கலள்ளி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். விபத்துக்குள்ளான மற்றொரு காரில் பயணித்து வந்தவர்கள் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்த விபத்து குறித்து அறிந்த தார்வார் புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் விபத்தில் பலியான மடாதிபதியின் உடல் உள்பட 4 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களையும் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். விபத்தில் மடாதிபதி பசவேஸ்வர சுவாமி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்