உத்தனப்பள்ளி அருகே, தாயுடன் சேராமல் ஊருக்குள் மீண்டும் வந்த குட்டி யானை - பொதுமக்களை பார்த்து மிரண்டு ஓடியதால் பரபரப்பு

உத்தனப்பள்ளி அருகே தாயுடன் சேராமல் மீண்டும் ஊருக்குள் வந்த குட்டி யானையை பொதுமக்களை பார்த்து மிரண்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-01-27 22:45 GMT
ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ளது சானமாவு காப்புக்காடு. இந்த காட்டில் 30–க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. கடந்த 12–ந் தேதி சானமாவு வனப்பகுதியில் இருந்து 8 மாத குட்டி பெண் யானை தாயிடம் இருந்து தனியாக பிரிந்து அருகில் உள்ள அகரம் கிராமத்திற்குள் வந்தது.

தொடர்ந்து இந்த குட்டி யானை காட்டிற்குள் செல்ல மறுத்ததால் வனத்துறையினர் மயக்க ஊசி போட்டு பிடித்தனர். பின்னர் குட்டி யானையை அதன் கூட்டத்துடன் சேர்த்தனர். இந்த யானை தனது தாயுடன் சேர்ந்து இருக்கும் என வனத்துறையினர் நினைத்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை அந்த குட்டி யானை சானமாவு ஏரிக்கு தனியாக வந்தது. இதைப் பார்த்த அந்த பகுதியை சேர்ந்த சிலர் யானையுடன் புகைப்படம் எடுக்க சென்றனர். பொதுமக்களை பார்த்ததும் மிரண்டு போன குட்டி யானை அங்கும், இங்கும் ஓடியது. அப்போது அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு மோட்டார்சைக்கிளை குட்டி யானை தலையால் முட்டி கவிழ்த்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் நீண்ட நேரத்திற்கு பிறகு அது வனப்பகுதிக்குள் சென்றது. ஆனாலும் அந்த யானை தாயுடன் சேரவில்லை என்றே கூறப்படுகிறது. சானமாவு காட்டில் தனியாக குட்டி யானை சுற்றித் திரிகிறது. அது மீண்டும் ஊருக்குள் வர வாய்ப்பு உள்ளது. இதனால் வனத்துறையினர் குட்டி யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்