சேலம் அருகே, ஆடு மேய்க்கும் தகராறில் கல்லால் தாக்கி பெண் கொலை - கட்டிட மேஸ்திரி கைது

சேலம் அருகே ஆடு மேய்க்கும் தகராறில் கல்லால் தாக்கி பெண் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் கட்டிட மேஸ்திரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2020-01-27 23:00 GMT
கொண்டலாம்பட்டி,

சேலம் மாவட்டம் சிவதாபுரம் அருகே வேடுகாத்தாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி சிந்தாமணி (வயது 48). இவரது தாய் ஆராயி (75), சொந்தமாக ஆடுகளை வைத்து வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் ஆராயி அங்குள்ள புறம்போக்கு நிலத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.

அப்போது, அதே பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் அங்கு வந்து மூதாட்டியிடம் மானாவாரி நிலத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விடக்கூடாது என்று கூறி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர் மூதாட்டியை தாக்கி கீழே தள்ளி விட்டதாகவும் தெரிகிறது. இதனைத்தொடர்ந்து வீட்டிற்கு சென்ற ஆராயி தனது மகள் சிந்தாமணியிடம் நடந்த விவரத்தை தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவர், கண்ணன் வீட்டிற்கு சென்று ஆடு மேய்க்கும் போது தனது தாயிடம் தகராறு செய்தது ஏன்? என்று தட்டி கேட்டார். அப்போது, கண்ணன் மற்றும் அவரது மாமனார் பழனிசாமி (63) ஆகியோர் சிந்தாமணியிடம் தகராறில் ஈடுபட்டனர். மேலும், அவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த பழனிசாமி, கீழே கிடந்த கல்லால் சிந்தாமணியின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிந்தாமணிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து ஏற்கனவே புகாரின்பேரில் கொண்டலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராணி, சப்–இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் ஆகியோர் பழனிசாமி மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்திருந்தனர். தற்போது சிந்தாமணி ஆஸ்பத்திரியில் இறந்துவிட்டதால் கொலை முயற்சி வழக்கை, போலீசார் கொலை வழக்காக மாற்றி பழனிசாமியை கைது செய்தனர். பழனிசாமி கட்டிட மேஸ்திரி வேலை செய்து வந்துள்ளார். ஆடு மேய்க்கும் தகராறில் பெண் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் வேடுகாத்தம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்